தஞ்சாவூர்: தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.2.50 கோடியில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டிற்கு வந்தால் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் மக்களுக்கு இடர்பாடு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாநகரில் மக்கள் தொகை பெருக்கத்தின் தொடர்ச்சியாக வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகியதன் காரணமாக வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்துவது என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கான இடப்பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவற்றை தவிர்க்க தஞ்சை காந்திஜிசாலை, தென்கீழ் அலங்கத்தில் உள்ள வணிக வளாகம், அண்ணாசாலை ஆகியவற்றில் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களுக்கு கார்கள், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி சாலை, தெற்கு அலங்கம் பகுதிகளிலும் கார்கள் நிறுத்தும் இடம் இல்லாததால் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் வாகன நெரிசல் அதிகமாகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இந்நிலையில் தஞ்சை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றது. அவற்றின் ஒரு பகுதியாக வாகனங்கள் நிறுத்தும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது.

56 கார்களை நிறுத்தக்கூடிய வகையில் இந்த வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. தஞ்சையில் மக்கள் தொகை பெருக்கத்தின் தொடர்ச்சியாக வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகி உள்ளது. முக்கியமாக கார்கள்,  பைக்குகள் அதிகளவில் வாங்குகின்றனர். இதன் காரணமாக வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்துவது என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

வாகனங்களை நிறுத்துவதற்கான இடப்பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை தவிர்க்க தஞ்சை காந்திஜிசாலை, தென்கீழ் அலங்கத்தில் உள்ள வணிக வளாகம், அண்ணாசாலை ஆகியவற்றில் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கடைகள், ஓட்டல்களுக்கு கார்கள், பைக்குகளில் வருபவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே கிடைக்கும் இடத்தில் கார், பைக்குகள் நிறுத்தி விடுகின்றனர். முக்கியமாக பஸ்ஸ்டாண்டிலிருந்து சிவகங்கை பூங்கா செல்லும் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்குகின்றன. தற்போது நிறைவடையும் நிலையில் உள்ள இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும். இவை பயன்பாட்டிற்கு வந்தால் கார்களை சாலைகளில் நிறுத்தும் அவசியம் இருக்காது. விபத்துக்களும் ஏற்படாது. எனவே இதுகுறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.