மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிடில் தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க தஞ்சாவூர் கிளை தலைவர் பரந்தாமன் வேதனையுடன் தெரிவித்தார்.



தஞ்சாவூரில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க, தஞ்சாவூர் கிளை சார்பில் தமிழக நீர்வள மேம்பாடு விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பரந்தாமன் தலைமை வகித்தார். செயலாளர் முரளி, இணை செயலாளர் அசோகன், பொருளாளர் வீரரமணி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு பரந்தாமன் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகத்தில் சராசரி ஆண்டு மழை 925 மி.மீ., பெய்கிறது. இதனால், ஆண்டு ஒன்றுக்கு 2,500 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் தேவை என்பது 1,260 டி.எம்.சி., மட்டுமே தான்.  இந்நிலையில்,  100 நீர்த்தேக்கங்கள், 40 ஆயிரம் கண்மாய்கள் மூலம் நமக்கு 1,058 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கிறது. தற்போது கண்மாய்கள், நீர்தேக்கங்கள் வண்டல் படிந்து 20 சதவீதம் தூர்ந்து போய் உள்ளது. இதனால், 142 டி.எம்.சி., தண்ணீர் அதில் தேக்க முடியாமல், தண்ணீர் கடலில் கலந்து விடுகிறது. இதனால் 916 டி.எம்.சி., தான் கிடைக்கிறது.





எனவே, தமிழக அரசு துர்ந்துபோயுள்ள நீர்த்தேக்கங்கள், கண்மாய்களை ஒரு மீட்டர் அளவிற்கு அழப்படுத்தி துார்வாரினால், தண்ணீரை முழுமையாக தேக்க முடியும் என அரசுக்கு கருத்துரை அனுப்பியுள்ளோம். சரியான முறையில் நீர்தேக்கங்களை கையாண்டால் தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தன்னிறைவு மாநிலமாக விளங்கும்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால் மேகதாது கர்நாடக மாநிலத்தின் எல்லையில் உள்ளது. மேகதாதுவிற்கு கீழே கர்நாடகவிற்கு எந்த தண்ணீர் தேவையும் இல்லை. 67 டி.எம்.சி., அளவு தண்ணீர் தேக்கும் அளவிற்கு கொண்ட அணையை கட்ட முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் பெங்களூருக்கு தண்ணீரை குடிநீருக்காக கொண்டு செல்ல உள்ளதாக கூறுகின்றனர்.

கபினி, கிருஷ்ணசாகர் அணையில் இருந்து திறக்கும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு தான் வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணை கட்டி விட்டால், 67 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு வராது. அவர்கள் இஷ்டத்திற்கு தான் தண்ணீரை திறப்பார்கள். தமிழக அரசு நீதிமன்றத்தையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும் எம்.பி.,க்கள் மூலம் அணுகி அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பை உணர்த்த வேண்டும்.

தமிழகத்தில் காவிரி பாசனப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு என 33 சதவீதம் காவிரி டெல்டாவில் உள்ளது. இங்கு பாசனம் நின்று போனால், தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது. மேலும், டெல்டா பாலைவனமாக மாறினால், எளிதாக மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. பாலாற்று படுகையில் ஆம்பூர் துவங்கி ராணிப்பேட்டை, வாலாஜா வரை தோல் பதனிடும் தொழிற் சாலைகளிலிருந்து வரும் ரசாயனக் கழிவுகள் பாலாற்றுப் படுகை பாழாகியுள்ளது.

இதனால் விவசாயம், கால்நடைகள் பாதிக்கப்படும். இதை போல நொய்யல் ஆற்றுப்படுகையும் பாழ்ப்பட்டு உள்ளது. எனவே தண்ணீர் பாழாகி வருவதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.