நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு என சோழர்கள், தண்ணீரை, இயற்கை கொடுத்த பிள்ளையாக பாவித்து, வணங்கி போற்றி வந்துள்ளனர். அப்படி அமைக்கப்பட்ட ஒரு மாபெரும் ஏரிதான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கள்ளப்பெரம்பூர் ஏரி என்றழைக்கப்படும் செங்கழுநீர் ஏரி. கல்லணையை கட்டிய கரிகாலன், நீரை பகிரும் தொழில்நுட்பத்தை உணர்த்தி சென்றார். அவரது வழிவந்த ராஜராஜ சோழன், கல்லணையில் இருந்து பிரிந்து வரும் தண்ணீரை சேமிக்கும் திட்டத்தை வகுத்து, ஏரிகள், குளங்களை வெட்டி வைத்தார். அவற்றில் ஒன்று தான், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கள்ளப் பெரம்பூர் ஏரி. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் பொழியும் மழை நீரானது, சிவப்பு நிற மணலில் ஓடி வந்து சேருமிடம் தான், இன்று கள்ளப்பெரம்பூர் ஏரியாக அழைக்கப்படும் பழமையான செங்கழுநீர் ஏரி. இந்த ஏரி, 642 ஏக்கர் பரப்பளவில், எட்டு மதகுகளையும், இரண்டு வெள்ள நீர் வடிகால்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கள்ளபெரம்பூர்-1, கள்ளபெரம்பூர் - 2, ராயந்துார், சக்கர சாமந்தம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சீராளூர் ஆகிய கிராமங்களுக்கு இந்த ஏரி தண்ணீர் செல்லுகிறது. கல்லணையில் பிரிந்து வரும் வெண்ணாறு, கச்சமங்கலம் அணையில் இருந்து, ஆனந்தகாவிரி வாய்க்கால் வழியாக வழிந்தோடி வருவது தான், இதற்கான நீராதாரம். புரிந்து காணப்படும் இந்த கள்ளப் பெரம்பூர் ஏரியில் இரை தேடி ஏராளமான பறவைகள் வருகின்றன. முக்கியமாக நீர் காகம், கொக்கு போன்றவை அதிகளவில் வந்து தங்கள் உணவை உண்ணுகின்றன. மாலை நேரத்தில் சடசடவென பறக்கும் கொக்குகளின் சப்தமும், சிலீரென்று தண்ணீருக்குள் மூழ்கி செல்லும் நீர் காகங்களின் வேகமும் பார்ப்பவர்கள் கண்ணையும், மனதையும் கவரும். திருவாரூர் மாவட்டத்தில் வடுவூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் போல் இங்கும் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன.
தஞ்சையில் மனதை கொள்ளை கொள்ளும் கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரி..!
என்.நாகராஜன் | 29 Aug 2022 07:51 AM (IST)
கந்தர்வக்கோட்டையில் பொழியும் மழை நீரானது, சிவப்பு நிற மணலில் ஓடி வந்து சேருமிடம் தான், இன்று கள்ளப்பெரம்பூர் ஏரியாக அழைக்கப்படும் பழமையான செங்கழுநீர் ஏரி.
கள்ளப்பெரம்பூர் ஏரி
Published at: 29 Aug 2022 07:51 AM (IST)