தஞ்சாவூர்: ரூ.20 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு தனது உறவினர் மோசடி செய்து விட்டதாக கூறி தஞ்சை கலெக்டர் அலுவலக வாசலில் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்ற வாலிபரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுப்பது வழக்கம். குடும்ப பிரச்னை, பட்டா கோருதல், பொதுப்பிரச்சினை, முதியோர் பென்சன் என பல்வேறு குறைகள் குறித்து மனுக்கள் அளிக்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். சில நேரங்களில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதால் சிலர் மண்எண்ணை, பெட்ரோல் போன்றவற்றை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்று போராட்டத்தில் ஈடுபவர்.
இதற்காகவே பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வருபவர்கள் அனைவரையும் வாசல் பகுதியிலேயே போலீசார் முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிப்பது வழக்கம். தண்ணீர் பாட்டில் எடுத்து சென்றாலும் அதை திறந்து அது தண்ணீர் தானா என பார்த்த பின்பு போலீசார் கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதித்து வருகின்றனர். மிகுந்த சோதனை நடத்தினாலும் சில நேரங்களில் உள்ளே செல்லாமல் வாசல் பகுதியிலேயே சிலர் போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு டிப்டாப் உடையில் வந்த வாலிபர் ஒருவர் சட்டென்று தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி கொண்டு தீ பற்ற வைக்க முயன்றார்.
இதைப் பார்த்து பாதுகாப்பு பணியில இருந்த போலீசார் அவரது கையில் இருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை தட்டி விட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். பின்னர் போலீசார் அந்த வாலிபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் மாப்பிள்ளை நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பதும், உறவினரான கலியமூர்த்தி என்பவர் ரூ.20 லட்சம் பெற்று கொண்டு தராமல் மோசடி செய்து வருகிறார். அதனால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். பின்னர் போலீசார் அவரை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
மிகக் கடுமையாக கலெக்டர் அலுவலக வாசல் பகுதியிலேயே போலீஸார் பாதுகாப்பு மேற்கொண்டு இருக்கும்போதே வாலிபர் ஒருவர் இவ்வாறு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.