தஞ்சாவூர்: இன்ப அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்த உணர்வை தஞ்சையை சேர்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு சமூக ஆர்வலரும், ஜோதி அறக்கட்டளை நிறுவனத்தலைவருமான பிரபு ராஜ்குமார் ஏற்படுத்தினார். எதற்காக தெரியுங்களா?


தஞ்சை மாநகரில் காலை வேளையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர் தூய்மை பணியாளர்கள். இவர்களை நேரில் சென்று சந்தித்து சமூக ஆர்வலரும், ஜோதி அறக்கட்டளை நிறுவனத் தலைவருமான பிரபு ராஜ்குமார் சிவப்பு வண்ண நிறத்தில் மூடப்பட்டு இருந்த தட்டை அவர்களிடம் நீட்டினார். தங்களிடம் எதற்கு என்ற கேள்விப் பார்வையோடு அவரை பார்த்த தூய்மைப்பணியாளர்களை அந்த தட்டை திறக்க கூறினார், திறந்த தூய்மைப்பணியாளர்களுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. ஆம்... திருப்பதி பிரசாத லட்டும், ஆள் உயர பெருமாள் காலண்டரையும் தூய்மைப்பணியாளர்களுக்கு சர்ப்ரைஸாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் பிரபு ராஜ்குமார்.




திருப்பதிக்கு செல்வது என்பது அனைத்து தரப்பினராலும் இயலாத காரியம். முக்கியமாக பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு தினந்தோறும் ஊதியம் என்ற நிலையில்தான் வாழ்க்கை செல்கிறது. இதில் பணம் செலவு செய்து திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்பது இயலாத காரியம். ஆனால் தங்களையே தேடி வந்து பிரபு ராஜ்குமார் திருப்பதி பெருமாள் படத்தையும், பிரசாதம் லட்டையும் வழங்கியதால் இன்ப அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.


எங்களின் குலத்தெய்வ சாமியே திருப்பதி பெருமாள் தான் என கூறி மிகுந்த மகிழ்ச்சியுடனும், மனம் நிறைந்த நன்றிகளுடனும் பிரசாதத்தை பெற்றுக் கொண்ட தூய்மை பணியாளரின் மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. தஞ்சை மாநகராட்சிக்கு உள்பட்ட 51 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் 600 பேர் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.


நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க சமூக ஆர்வலரும், ஜோதி அறக்கட்டளை நிறுவனருமான பிரபு ராஜ்குமார்தான் திருப்பதிக்கு சென்றபோது தனக்கு மட்டுமின்றி அவர்களுக்கும் சேர்த்து பிரசாத லட்டு மற்றும் ஆள் உயர பெருமாள் காலண்டர் வாங்கி வந்த செயல் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.


இதுகுறித்து தூய்மைப்பணியாளர்கள் தரப்பில் கூறுகையில், எதிர்பாராத நிகழ்வாக இந்த பிரசாதம் மற்றும் திருப்பதி பெருமாள் படம் போட்ட காலண்டர் எங்களை தேடி வந்து கொடுத்த பிரபு ராஜ்குமாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அதுவும் தேடிவந்து கொடுத்த அவரது பெருந்தன்மைக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.