தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே குடமுருட்டி ஆற்றில், இரண்டு சிறுமிகள் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஒன்பதுவேலி காமராஜர் காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகள் பிரித்திகா (14). தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவரது மகள் குணசுந்தரி (16). இவர் 10ம் வகுப்பு படித்து முடித்து விட்டு, வீட்டில் இருந்து வந்துள்ளார். இருவரும் இணைப்பிரியாத தோழிகள். இவர்கள் இருவரும் இன்று மதியம் குடமுருட்டி ஆற்றின் கரையில் ஆடு மேய்க்க சென்றனர். ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தபோது இருவரும் ஆற்றில் குளிக்க முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து இருவரும் ஆற்றில் குளிக்க முயன்ற போது பெரிய அளவிலான பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் சிக்கிக் கொண்டனர். இதனால் இருவரும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினர். இதற்கிடையில் ஆடு மேய்க்க சென்ற பிரித்திகா, குணசுந்தரி இருவரும் வெகு நேரம் வரை வீட்டுக்கு திரும்பாததால் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் பல இடங்களிலும் தேடி பார்த்தனர்.
பின்னர் ஆற்றுக்கரைக்கு வந்து பார்த்தபோது இருவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடன் உறவினர் இரண்டு சிறுமிகளையும் தண்ணீரில் இருந்து மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமிகள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.