தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடக்க உள்ள சர்வதேச அருங்காட்சியக தின கொண்டாட்டத்தில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் மாணவர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம், சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் கலைக் கூடத்தின் சார்பில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வரும் 18 முதல் 21ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதில், 18-ஆம் தொடங்கி 4 நாட்கள் ''எனது பாரம்பரியம்'' என்ற தலைப்பில், தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பொது மக்கள் தங்கள் கலைப் பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி நடக்கிறது. 18-ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் அருங்காட்சியக கலைக்கூடத்தில் நடைபயணம், மறுநாள் 19-ம் தேதி காலை 10 மணிக்கு 6-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி ஆகியவை நடக்கிறது.
தொடர்ந்து 20-ம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கு தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் புகைப்படப் போட்டியும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில், ''அருங்காட்சியங்களின் வரலாறு" என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான பணிமனை ஆகியவை நடக்கிறது.
மேலும் அன்று மாலை 6. 30 மணிக்கு தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.
முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 98424 55765, 94432 67422, 94425 47682 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். சர்வதேச அருங்காட்சியக தின கொண்டாட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மே 18 ம் தேதி சர்வதேச அருங்காட்சியகத் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் நோக்கம் கலாச்சாரப் பரிமாற்றங்களை ஏற்படுத்தும் அருங்காட்சியகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். 1977ம் ஆண்டில் சர்வதேச அருங்காட்சியகங்கள் ஆணையமானது முதலாவது சர்வதேச அருங்காட்சியகத் தினத்தை ஒருங்கிணைத்தது.
2019ம் ஆண்டில் இத்தினத்தின் கருத்துருவானது, “அருங்காட்சியகங்கள் கலாச்சார மையங்களாகும் : மரபின் எதிர்காலம்” என்பதாகும். 1753ம் ஆண்டில் உலகின் முதலாவது பொது அருங்காட்சியகம் பிரிட்டனில் தொடங்கப்பட்டது. 1851ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சென்னையில் உள்ள அரசாங்க அருங்காட்சியகம் (அல்லது) மதராஸ் அருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.