தஞ்சாவூர்: விடுமுறை தினமான நேற்று காலை முதல் இரவு வரை கல்லணையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே சுற்றுலாத்தலமாக திகழும் கரிகாலன் கட்டிய கல்லணையில் காவிரி ஆறு, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம்  ஆகிய ஆறுகள் செல்கிறது. சோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது தான் கல்லணை. இதன் நீளம் 1080 அடி அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். இதன் அமைப்பு நெளிந்து வளைந்த கட்டுமானம் ஆகும். வெறும் மணலில் அடித்தளம் அமைத்து அணை கட்டிய தமிழர்களின் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.


பழமையான அணைகளோடு ஒப்பிடத்தக்க இந்தியாவின் ஒரே அணை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த கல்லணையாகும். . தஞ்சாவூர் மாவட்டத்தில் தோகூர் - கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது. காவிரியின் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், நீரை பயன்படுத்தி பாசனப் பரப்பை அதிகமாக்கவும் இந்த கல்லணை கட்டப்பட்டது. ஏறக்குறைய 2100 ஆண்டுகள் பழமையான இந்த கல்லணை இன்றும் காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது தான் மிகப்பெரிய ஆச்சரியம். கல்லணையின் வயது 2100 ஆண்டுகள் என்பதை கேட்டு ஆய்வாளர்களும் சுற்றுலா பயணிகளும் இன்றும் வியக்கின்றனர்.


12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டது. அந்த பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டது கூடுதல் சிறப்பு. 1839 ஆம் ஆண்டு கல்லணை மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மேல் நின்று பார்த்தால் மொத்த கல்லணையின் அழகும் ஆச்சரியும் கண்ணில் தெரியும். தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல ஊர்களில் இருந்து வந்து கல்லணையை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து செல்கின்றனர்.


மேலும் கல்லணை பாலத்தில் வரலாற்று புராதன சிலைகள் வைக்கப்பட்டுள்ளதையும் கரிகாலன் பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா 'கரிகாலன் மணிமண்டபம் என அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்துவிட்டு மாலை நேரத்தில் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு செல்கிறார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் வேகத்தை குறைக்கும் அளவிற்கு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் விவசாய பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முறை வைத்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்று பாலத்தின் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் மீதும் சுற்றுலா பயணிகளின் பைக் மற்றும் கார் வைப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தொடர்ந்து தோகூர் போலீசார் போக்குவரத்தினை சரிசெய்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு உதவி புரிந்தனர். இதனை சுற்றுலா பயணிகள் பெரிதும் பாராட்டினர். மேலும் வாராவாரம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மாவட்ட காவல்துறை கல்லணைக்கு விடுமுறை நாட்களில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.