மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், மேக்கிரிமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி வைத்து நெல் கொள்முதல் பணியை தொடங்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், மேக்கிரிமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.




இந்தாண்டு  முட்பட்ட குறுவை பருவத்தில்  சுமார் 34,813 ஹெக்டேர் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தோராயமாக 1,39,250 மெ.டன் நெல் கொள்முதல் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இப்பருவத்திற்கு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய 119 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டிடங்களாக உள்ளது.  தற்சமயம் முதற்கட்டமாக குத்தாலம் தாலுகாவில் திருவாடுதுறை, கோணேரிராஜபுரம், திருவாலங்காடு, கருப்பூர், கோடிமங்கலம், சிவனாகரம், மேக்கிரிமங்கலம் ஆகிய 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு அதில் மேக்கிரிமங்கலம், திருவாடுதுறை மற்றும் கருப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. 




நடப்பு பருவத்திற்கு சன்னரக நெல்லுக்கு 2,160 ரூபாயும், பொது ரக நெல்லுக்கு 2,115 ரூபாயும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து நெல்லினை விற்பனை செய்திட வங்கி கணக்கு, ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசியுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லினை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தீடீர்  மழை போன்ற காரணங்களால் பாதிக்கப்படாமல் உடனுக்குடன் கிடங்குக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவது தெரிய வந்தால் கொள்முதல் நிலைய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், வெளி மாவட்டங்களில் இருந்து நெல் கொண்டு வரப்பட்டால் அதை கண்டறிய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள்  அல்லாது வியாபாரிகள் நெல் கொண்டு வந்து நேரடி  கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் குறித்த புகார்களுக்கு நேரடி நெல் கொள்முதல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 04364-211054 -யை தொடர்பு கொண்டு  புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்தார். 


Mari Selvaraj : அடுத்த படத்துக்கு தயார்.. 90-களில் தூத்துக்குடிதான் கதைக்களம்.. மாரியின் அடுத்த பட அப்டேட்..


இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, இணை இயக்குனர் வேளாண்மை சேகர், குத்தாலம் ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன், குத்தாலம் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் முருகப்பா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயா ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசேகர், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.