தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் உள்ள மலர் வணிக வளாக நுழைவாயில் கொட்டப்படும் பூக்கழிவுகள் தற்போது பெய்து வரும் மழையில் ஊறி போய் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இப்பகுதியில் அதிகளவு கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்றுநோயை உருவாக்கும் அபாய நிலை உள்ளது. எனவே இவற்றை உடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


தஞ்சாவூர் நகர் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். அதேபோல் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனை போன்றவை அமைந்துள்ளது. இங்கு மலர் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. 





தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் இயங்கும் மலர் வணிக வளாகம்


தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் மலர் வணிக வளாகத்தில் தினமும் அதிகாலை முதல் இரவு வரை பொதுமக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த பகுதியில் திருச்சி, திண்டுக்கல், சேலம், கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் மொத்தமாக கொண்டு வரப்படும். இங்கு கொண்டு வரப்படும் பூக்களை மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் பூக்களின் விற்பனை முடிந்த பிறகு அங்கு உள்ள பூக்களின் கழிவுகளை அந்த வணிக வளாகத்தின் நுழைவாயிலில் கொட்டுவது வழக்கம்.


அகற்றப்படாத பூக்கழிவுகளால் கொசு உற்பத்தி


அதனை தஞ்சை மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்வார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு கொட்டப்படும் பூக்கழிவுகள் அனைத்தும் அகற்றப்படாமல் உள்ளது. எனவே பூக்கழிவு அங்கு ஒட்டப்பட்டு இருப்பதால் கொசுக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் கடந்த மூன்று தினங்களாக தஞ்சாவூரில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.


எனவே மாநகராட்சி ஊழியர்கள் அங்கு கொட்டப்பட்டுள்ள பூக்கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பூக்கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது


இந்த பகுதியில் இருந்து திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, வேதாரண்யம், பட்டுக்கோட்டை உட்பட பல ஊர்களுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மலர் வணிக வளாகம் பஸ்ஸ்டாப்பிற்கு அருகில் அமைந்துள்ள நிலையில் அங்கு கொட்டப்படும் கழிவுகள் மழைநீரில் அழுகி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இங்கு உற்பத்தியாகும் கொசுக்களாலும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் வரும் நாட்களில் பருவமழை அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளதால் மலர் கழிவுகளை உடன் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


பூக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றணும்


இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சை நகர் பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமானோல் இந்த மலர் வணிக வளாகத்திற்கு வந்து பூக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் எப்போதும் இந்த மலர் வணிக வளாகம் பரபரப்பாக இயங்கும். இந்நிலையில் இங்கு சேகரிக்கப்படும் பூக்கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் மழை தண்ணீரில் ஊறி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. கொசு உற்பத்தி மையமாக மாறி வருகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பூக்கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.