தஞ்சாவூர்: யாருக்குமே பயனின்றி மூடிக்கிடக்கும் தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே புதிதாக கட்டப்பட்ட திருவள்ளுவர் வணிக வளாகம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


வணிக வளாகமாக கட்ட முடிவு செய்த மாநகராட்சி


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருவள்ளுவர் தியேட்டரை இடித்து விட்டு அப்பகுதியில் வணிக வளாகத்தைக் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. பெரியகோயிலை மறைக்கும் விதமாக கட்டக் கூடாது என தொல்லியல் துறை ஆட்சேபனை தெரிவித்தது உள்ளிட்ட பல காரணங்களால் இந்த பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இந்த வணிகவளாக கட்டுமானப் பணியை நடந்து வந்தது. எப்போ கட்டி முடிப்பீங்க என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில அப்பாடா முடிச்சுட்டோம் என்று ஒரு வழியாக கிட்டத்தட்ட மால் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடம் ரூ. 53 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.


50 கடைகள், திரையரங்கு கொண்ட மால்


மொத்தம் 98 ஆயிரத்து 790 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 4 அடுக்குகளைக் கொண்டு இந்த மால் கட்டப்பட்டுள்ளது. இதில், 47 கடைகள், 3 பெரிய கடைகள், திரையரங்கம் போன்றவை கட்டப்பட்டுள்ளன. மேலும், 30 இரு சக்கர வாகனங்கள், 130 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், லிப்ட், நகரும் படிக்கட்டுகள், கழிப்பறை போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


மேலும், 56 கார்கள் நிறுத்தும் வகையில் பன்னடுக்கு கார் நிறுத்துமிடம் ரூ. 15.66 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த மால் கட்டிடடத்தில் உள்ள கடைகள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஏலம் நடத்தப்பட்டது. ஆனால், வாடகை அதிகமாக இருந்ததால் உச்சத்தில் இருந்ததால் உள்ளூரைச் சேர்ந்த வியாபாரிகள் பெரும்பாலும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.


வாடகை அதிகம்... பெரிய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன


பெரிய நிறுவனங்கள் மட்டும் கலந்து கொண்டு ஏலத்தில் எடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அப்போதைய ஆணையர் மகேஸ்வரி, காந்திஜி வணிக வளாகம், திருவள்ளுவர் வணிக வளாகத்தில் விடப்பட்ட ஏலம் முறையாக நடைபெறவில்லை என்றும், நகராட்சி நிர்வாக ஆணையரின் ஆலோசனைப்படி, ஆய்வு செய்து, ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஏலம் விடப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.


இருப்பினும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த வளாகம் திறக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுக் கிடக்கிறது. இதைத் திறக்க வேண்டும் வணிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


நியாயமான வாடகைக்கு விட வேண்டும்


இதுகுறித்து மாமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தரப்பில் கூறுகையில், கட்டடம் கட்டிய பிறகுதான் டெண்டர் விட வேண்டும். ஆனால், இந்த வளாகத்தைப் பொருத்தவரை கட்டடம் கட்டுவதற்கு முன்பே டெண்டர் விடப்பட்டது. வாடகை அதிகம் என்பதால், ஏலத்தில் உள்ளூர் வியாபாரிகள் கலந்து கொள்ளவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்டு கடைகளை எடுத்தன. மால் என்பது ஒரு சிலர் மட்டும் தொழில் செய்யும் இடமாக இருக்கக் கூடாது. அனைவரும் தொழில் செய்யும் இடமாகவே இருக்க வேண்டும். எனவே, உள்ளூரைச் சேர்ந்த சிறு வணிகர்களும் பயன்பெறும் விதமாக நியாயமான வாடகைக்கு கடைகளை விட வேண்டும் என்றனர்.


மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கையில் அடுத்த வாரம் ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.