தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் செல்லப்பன்பேட்டையில் பெரியப்பாவுடன் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த முதுகலை பட்டதாரி வாலிபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இன்று காலை தஞ்சாவூர் பிணமாக கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வளப்பக்குடி பகுதியை சேர்த்தவர் கனகராஜ். இவரது மகன் விஷ்ணுகுமார் (23). இவர் அரியலூர் மாவட்டம் லால்குடி அருகே குமுழுர் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் எம் காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று பூதலூர் அருகே செல்லப்பன்பேட்டையில் உள்ள தனது பெரியப்பா ஆசை தம்பி வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று மதியம் ஆசைத் தம்பியும்,விஷ்ணு குமாரும் வயலுக்கு சென்று விட்டு செல்லப்பன் பேட்டை பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். இதில் நீரின் வேகத்தில்,விஷ்ணு குமாரும், ஆசைத்தம்பி இருவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் வயல் வேலைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த பெண்கள் ஆசைத்தம்பியை தங்களின் சேலைகளை உதவிக்கு கொடுத்து தண்ணீரிலிருந்து அவரை மீட்டார். தன் கண்முன்பே தம்பி மகன் ஆற்றில் அடித்து செல்வதை கண்டு ஆசைத்தம்பி கதறி துடித்தார். உடன் இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட விஷ்ணுகுமாரை பல மணி நேரம் தேடினர். இருப்பினும் விஷ்ணுகுமார் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆனதால் வெளிச்சம் இன்றி தேட முடியாத நிலை உருவானது. இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூர் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே கிருஷ்ணகுமாரின் உடல் கரை ஒதுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று,விஷ்ணு குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியப்பாவின் கண்முன்பே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.