குஜராத் மாநிலத்தை சேர்ந்த விவசாயக் குடும்பம், தங்களுடைய லக்கி காருக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


ஏழை, எளிய மக்கள், இறுதிச்சடங்கை நடத்துவதற்கு கூட சிரமப்பட்டு வருகின்றனர். இம்மாதிரியான சூழலில், 4 லட்சம் ரூபாய் செலவு செய்து, தங்களுடைய அதிர்ஷ்ட காருக்கு விவசாயி குடும்பம் இறுதிச்சடங்கு நடத்தி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


காருக்கு இறுதிச்சடங்கு செய்த விவசாயி:


இந்த சம்பவம் குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் நடந்துள்ளது. லத்தி தாலுகாவின் பதர்ஷிங்கா கிராமத்தில் சஞ்சய் போலாரா மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இறுதிச்சடங்கில், மதகுருக்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1,500 பேர் கலந்து கொண்டனர்.


போலாரா மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுடைய பண்ணையில் காருக்கு இறுதிச்சடங்கு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வேகன் ஆர் காருக்காக 15 அடி ஆழமான குழி தோண்டப்பட்டது.


காரின் பின்புறம், பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆரவாரத்துடன் பண்ணைக்கு எடுத்துச் செல்லப்பட்ட கார், தோண்டிய குழியில் புதைக்கப்பட்டது. பச்சை துணியால் மூடப்பட்ட காருக்கு பூசாரிகள் மந்திரங்களை சொல்லி, குடும்ப உறுப்பினர்கள் பூஜை செய்து, ரோஜா இதழ்களை தூவி விடை கொடுத்தனர். இறுதியாக, களிமண்ணை ஊற்றி காரை புதைக்க எக்ஸ்கவேட்டர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.


 






நடந்தது என்ன?


இதுகுறித்து விவசாயி போலாரா கூறுகையில், "நான் இந்த காரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன். இது, எங்கள் குடும்பத்திற்கு செழிப்பைக் கொண்டு வந்தது. தொழிலில் வெற்றி கண்டது மட்டுமின்றி எனது குடும்பத்துக்கும் மரியாதை கிடைத்தது.


அந்த வாகனம் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அதிர்ஷ்டமாக அமைந்தது. எனவே, அதை விற்பதற்குப் பதிலாக, எனது பண்ணையில் சமாதியைக் காணிக்கையாகக் கொடுத்தேன். இறுதிச்சடங்குக்கு 4 லட்சம் ரூபாய் செலவழித்தேன்.


குடும்பத்தின் அதிர்ஷ்ட கார் மரத்தடியில் கிடப்பதை தனது வருங்கால சந்ததியினருக்கு நினைவூட்டும் வகையில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மரத்தை நட திட்டமிட்டுள்ளேன்" என்றார்.


இதையும் படிக்க: 4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்