தஞ்சாவூர்: கிராம ஊராட்சிகளில் அதிவேக இணையதள வசதி வழங்கும் 'பாரத் நெட்' திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் மற்றும் கண்ணாடி இழைகளை துண்டாக்கும், மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் அதிவேக இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் அதிவேக இணையதள வசதி வழங்கும் 'பாரத் நெட்' திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.


கண்ணாடி இழை (Optical fibre cable) 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்கப்படுகிறது. இதுவரை நமது மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 589 ஊராட்சிகளில் 588 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது. இதற்கான RACK / UPS உள்ளிட்ட உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் (VPSC) அல்லது அரசுக் கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.




இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்த்ப்பட்ட கிராம ஊராட்சியின் செயலாளர் அரசு ஆணையின்படி பொறுப்பாக்கப்பட்டு உள்ளார்.


கண்ணாடி இழை (Optical fibre cable) 85 சதவீதம் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள மின்கம்பங்கள் மூலமாக கொண்டு செல்வதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை (Optical fibre cable) கொண்டு செல்லக் கூடாது என தடை செய்கின்றனர். இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே இந்தக் கண்ணாடி இழை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள் மூலம் கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக் கூடாது.


மேலும் விளைநிலங்களில் உள்ள மின்கம்பங்கள் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும்போது பயிர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்ணாடி இழையில் எந்த விதமான உலோகப் பொருட்களும் இல்லை. எனவே இதனை திருடிச் சென்று காசாக்கலாம் என்ற தவறான புரிதல் வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது. 


இத்திட்டம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் அதிவேக இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் POP மையங்களில் பொருத்தப்பட்டுள்ள UPS. Router, Rack மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும். மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளை துண்டாக்கும் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.