தஞ்சாவூர்: பெற்றோரை இழந்த தஞ்சை கல்லூரி மாணவரின் கல்வி உதவி கோரிக்கையை ஜோதி அறக்கட்டளை வாயிலான உடன் நிறைவேற்றிய தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மாணவரின் கல்வி கட்டணம் ரூ.20 ஆயிரம் காசோலையாக வழங்கப்பட்டது.


தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை அன்பு நகர் 5ம் தெருவை சேர்ந்தவர்  ஜெகதீஸ்வரன். கல்லூரி மாணவர். இவரது தந்தை ஜெய்சிங். தாய் தேவி. இவரது தந்தை ஜெய்சிங் கடந்த 2022ம் ஆண்டிலும், தாய் தேவி 15 ஆண்டுகளுக்கு முன்பு 2008ம் ஆண்டிலும் இறந்துவிட்டனர்.


தற்போது தந்தை வழி பாட்டியான குளோரியின் பராமரிப்பில் ஜெகதீஸ்வரன் உள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு இயந்திரவியல் படித்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பை நேரில் சந்தித்து உதவி கோரி மனு அளித்தார். அதில் பெற்றோரை இழந்து யாரும் உதவி செய்வதற்கும் ஆதரவு இல்லாத குடும்ப சூழ்நிலை காரணமாக தனது கல்லூரி ஆண்டு கல்விக்கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.


மனுவை பெற்றுக் கொண்ட தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட பகுதி வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியரின் முறையான விசாரணைக்கு பிறகு இந்த மனுவானது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டது. இதன்பேரில் மாணவர் ஜெகதீஸ்வரன் கோரியிருந்த கல்விக்கட்டணம் காசோலையாக ஜோதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், மாணவர் ஜெகதீஸ்வரனிடம் இந்த காசோலையை வழங்கினார்.


மேலும் மாணவரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவர் குடும்பத்துக்கு 26 கிலோ அரிசி மற்றும் 1 மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் ஆகியவை ஜோதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.  பெற்றோரை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 


இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .


ஜோதி அறக்கட்டளை விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு பல்வேறு வகையிலும் உதவிகள் செய்து வருகிறது. மேலும் மாணவர்களின் கல்விக்கட்டணம், ஆடைகள், ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்கள் வாங்கி உதவுவது, பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது என்று சமூக சேவைகள் ஏராளமாக செய்து வருகிறது. 


இதேபோல் ஹெல்மேட் அணிந்து வருபவர்களுக்கு காய்கறிகள், தக்காளி உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துவது, தூய்மைப்பணியாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது, அவர்களுக்கு தேவையான கையுறை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளது ஜோதி அறக்கட்டளை. கடந்த தீபாவளியின் போது தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பிரபல ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்று அவர்கள் விருப்பப்பட்ட ஆடைகளை எடுத்து தந்து மகிழ்வித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


ஜோதி அறக்கட்டளை மாணவர்களின் குடும்ப நிலை அறிந்து தக்க சமயத்தில் உதவிகள் செய்து வருவதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.