தஞ்சாவூர்: கத்திரிக்காய் விலை குறைந்தது. தஞ்சை உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்ததால் நாட்டு காய்கறிகள் மிகவும் விலை குறைந்து. கத்தரிக்காய் கிலோ ரூ.18க்கு விற்பனை செய்யப்பட்டது.


தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் மையப் பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், திருப்பூந்துருத்தி, பள்ளி அக்ரஹாரம், மருங்குளம், வேங்கராயன் குடிகாடு, கண்டிதம்பட்டு, கொல்லாங்கரை, சாமிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை தினமு; அதிகாலையிலேயே கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.


தேடி வந்து வாங்கும் மக்கள்


உழவர் சந்தை நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் அமைந்து இருந்தாலும் இங்கு விற்பனைக்கு வரும் காய்கறிகள் தரம் அருமையாக இருப்பதால் மருத்துவக்கல்லூரி சாலை, அருளானந்த நகர், கீழவாசல், பூச்சந்தை, இ.பி.காலனி, யாகப்பா நகர் என்று பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இங்கு தேடிவந்து காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். காய்கறிகளை தஞ்சை நகரில் வசிக்கும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இதுமட்டுமின்றி அருகிலுள்ள கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்களும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்குவது வழக்கம்.




உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது


கடந்த 2 வாரமாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இருப்பினும் தாங்கள் சாகுபடி செய்யும் காய்கறி பயிர்களை தினசரி தண்ணீர் ஊற்றி விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். உழவர் சந்தைக்கு வரும் காய்கறிகள் வரத்து கடந்த சில நாட்களாக 17 டன்னாக இருந்தது. இது தற்போது சற்றே உயர்ந்து 18 டன்னாக மாறியுள்ளது.


நாட்டு காய்கறிகளான கத்தரிக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் 6 டன் 105 கிலோ விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.


பழவகைகள் வரத்தும் அதிகரிப்பு


அதேபோல மாதுளை, ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம் போன்ற பழ வகைகள் 4 டன் 328 கிலோ விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. சுய உதவி குழுக்கள் மூலம் பல்லாரி வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, பீன்ஸ், கேரட், பீட்ரூட் ஆகிய காய்கறிகள் 7 டன் 654 கிலோ விற்பனைக்காக வந்திருந்தன.


மொத்தம் 18 டன் 87 கிலோ விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் நாட்டு காய்கறிகளான கத்தரிக்காய் கிலோ ரூ.18க்கும், மணப்பாறை கத்தரிக்காய் கிலோ ரூ.30க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.36க்கும், பாகற்காய் கிலோ  ரூ.34க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.26க்கும் தக்காளி கிலோ ரூ.26க்கும் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகள் விலை குறைந்து இருப்பது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


காய்கறிகள் தரமாக உள்ளன


இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், வெயில் காலம் என்பதால் காலையிலேயே சீக்கிரம் வந்து காய்கறிகளை வாங்கி விடுகிறோம். இல்லாவிடில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு செல்வதற்குள் வாடி விடுகிறது. காய்கறிகள் வரத்து அதிகம் இருப்பதால் பல்வேறு காய்கறிகளும் விலை குறைவாக கிடைக்கிறது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோடைக்காலத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு காய்கறிகளை அதிகம் சேர்ப்பதால் உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் கிடைக்கிறது. மேலும் விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உரங்கள் தெளிக்காமல் காய்கறிகள் நல்ல சத்துக்களுடன் விற்பனைக்கு வருகிறது. தற்போது விலையும் குறைந்துள்ளதால் கூடுதலாகவே காய்கறிகள் வாங்கி செல்கிறோம் என்றனர்.