எங்களுக்கு அவங்கதான் வேணும்... போராட்டக்களத்தில் இறங்கிய மாணவ, மாணவிகள் - எதற்காக தெரியுமா?
மாணவ, மாணவிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். தன் சொந்த மகன், மகள் போல் பாவித்து மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக பார்த்து கொண்டுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேம்பாலம் பார்வை திறன் குறையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி பெண் வார்டனை மாற்றியதை கண்டித்து 150 மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மீண்டும் அவரே இங்கு வார்டனாக செயல்பட வேண்டும். இல்லாவிடில் தேர்வுகளை புறக்கணிப்போம் என்று மாணவ, மாணவிகள் தரப்பில் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை திறன் குறை உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 100 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இப்பள்ளியுடன் விடுதியும் இணைந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே பார்வைத் திறன் குறையுடையோருக்கான மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் ஒரே பள்ளி இதுதான்.

இங்கு கடந்த 6 ஆண்டுகளாக வைரவல்லி (40) என்பவர் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் மாணவ, மாணவிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். தன் சொந்த மகன், மகள் போல் பாவித்து மாணவ மாணவிகளை பாதுகாப்பாக பார்த்து கொண்டுள்ளார். இதனால் மாணவ, மாணவிகளுக்கு வைரவல்லி மீது மிகுந்த பாசம் இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் வார்டனாக பணியாற்றி வந்த அனிதா (40) என்பவரை தற்போது இப்பள்ளிக்கு வார்டனாக மாற்றம் செய்து உள்ளனர்.
வைரவல்லியை திருச்சிக்கு மாற்றம் செய்து உள்ளனர். இத்தகவல் அறிந்த மாணவ, மாணவிகள் நேற்று இரவு முதல் சாப்பிடாமல் போராட்டம் செய்துள்ளனர். வார்டன் வைரவல்லியை மாற்றம் செய்யக்கூடாது என தெரிவித்து சாப்பிடாமல் இருந்து வந்த நிலையில் மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தி பள்ளி ஆசிரியர்கள் சாப்பிட வைத்துள்ளனர்.
இருப்பினும் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து 150 மாணவ, மாணவிகளும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து வார்டன் வைரவல்லியை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகள் தரப்பில் கூறுகையில், வார்டன் வைரவல்லியை பணியிட மாற்றம் செய்தால் தேர்வுகள் எழுதாமல் புறக்கணிப்போம். கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வரும் வைரவல்லி எங்களுக்கு அப்பா, அம்மா போன்று மிகுந்த பாதுகாப்புடன் இருந்து வந்தார். எங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களிலும் அவர் உறுதுணையாக இருந்து வந்தார். அவர் போன்று வேறு யாரும் இருக்க முடியாது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை மிகுந்த அக்கறையுடன் பார்த்து கொள்வார்.
இந்நிலையில் அவரைப் பணியிட மாற்றம் செய்துள்ளனர். இந்த பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். அவரே மீண்டும் இங்கு வார்டனாக பணியாற்ற வேண்டும். இல்லாவிடில் நாங்கள் தேர்வுகளை புறக்கணிப்போம். இங்கு எங்களுக்கு அம்மா, அப்பா, நண்பர் போல் இருந்தவர் அவர். எங்களுக்கு தேவையானவற்றை செய்து தருவார். அவரை போன்ற வார்டன் எங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரே இங்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் வந்து அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் அவ்வழியாக சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாணவ, மாணவிகள் பள்ளியை விட்டு வெளியில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு உடனடியாக அங்கு சென்று விசாரித்தார். அப்போது மாணவ, மாணவிகள் தங்கள் கோரிக்கை குறித்து அவரிடம் தெரிவித்தனர். உடன் அவர் நீங்கள் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. அனைவரும் சென்று சாப்பிடுங்கள். அதிகாரிகளிடம் உங்களின் கோரிக்கை குறித்து நான் தெரிவிக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வெயிலில் அமர்ந்து இருக்கக்கூடாது என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். இதை ஏற்ற மாணவ, மாணவிகள் அங்கிருந்து எழுந்து பள்ளிக்கு திரும்பினர்.
இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், வெயில் நேரத்தில் இவர்கள் இவ்வாறு வெளியில் அமர்ந்திருப்பது வேதனையை ஏற்படுத்தியது. எங்களுக்கு இது தொடர்பில்லாத விஷயமாக இருந்தாலும் மாணவ, மாணவிகள் நலனில் அக்கறை உள்ளது. அவர்களை சமாதானப்படுத்தி அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தேன். இதையடுத்து மாணவ, மாணவிகள் அங்கிருந்து எழுந்து பள்ளிக்கு சென்றனர். மாணவ, மாணவிகளின் இந்த போராட்டம் குறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.
பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவிகளை தன் சொந்த பிள்ளைகளை போல் பார்த்துக் கொண்ட வார்டன் வைரவல்லி பெயருக்கு ஏற்றார்போல் வைரமாக ஜொலித்து இருக்கிறார் என்பது மாணவ, மாணவிகளின் ஆதங்கத்திலிருந்து தெரிகிறது. அந்தளவிற்கு அவர் மாணவ, மாணவிகள் பாதுகாப்பில் அக்கறை கொண்டு இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.