தஞ்சாவூர்: பொங்கல் பண்டிகைக்கு காய்கறிகள் மற்றும் கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்துக்கள் வாங்க நேற்று இரவு 10 மணி வரை பொதுமக்கள் கூட்டம் தஞ்சாவூர் மார்க்கெட் மற்றும் கடைவீதிகளில் அலைமோதியது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையின் முதல் இடத்தை பிடிப்பது பொங்கல் பண்டிகைதான். பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து தமிழர்களாலும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்புடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின்போது பொதுமக்கள் பொங்கல் பொருட்களை ஒரு வாரத்திற்கு முன்பு வாங்க தொடங்கி விடுவர். அதில் கோலமாவு, பச்சரிசி, மண் பானைகள், கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்துகள், வெல்லம், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் விவசாயிகள் நிறைந்த தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை எப்போதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இன்று பொங்கல் பண்டிகை என்பதால் தஞ்சையில் நேற்று காலையில் இருந்தே பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்த வண்ணம் இருந்தனர். நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. காய்கறி மார்க்கெட், கீழவாசல் பகுதிகளில் இருபுறமும் இருசக்கர வாகனங்களும் வரிசைக்கட்டி நின்றன..
தஞ்சை சிவகங்கை பூங்கா, கீழவாசல், நாஞ்சிக்கோட்டை சாலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்புகள், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து போன்றவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. கரும்பு ஒரு கட்டு ரூ. 350 முதல் 400 வரையிலும், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஜோடி ரூ.50 முதல் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் லாரிகளிலும், லோடு ஆட்டோக்களிலும் வைத்து பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மையப்பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தைக்கு தஞ்சையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தோட்ட சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை உழவர் சந்தையில் விற்பனைக்காக குவிந்து வைத்திருந்தனர். காய்கறி வாங்கவும் வழக்கத்தை விட கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்பட்டது. காலை முதல் மாலை வரை கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.
கரும்பு கட்டுகளாகவும், தனித்தனியாகவும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். கரும்புகள் கட்டுகளாக ரூ.400 வரை விற்பனையான நிலையில் நேற்று இரவு விலை குறைந்தது. ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டது. தஞ்சை அருகே திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, ஒரத்தநாடு, சூரக்கோட்டை உட்பட பல பகுதிகளில் இருந்து கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. நேற்று 10 மணி வரை தஞ்சையில் கீழவாசல், மருத்துவக்ககல்லூரி சாலை, சிவகங்கை பூங்கா பகுதி போன்ற இடங்களில் மக்கள் கூட்;டம் அதிகளவு இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த பொங்கலை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றதற்கு இந்த விற்பனையே சாட்சி என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். முக்கியமாக காய்கறிகள் விற்பனை இம்முறை அமோகமாக இருந்தது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.