தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஆண்டு இலக்கீடாக ரூ 3214.45 கோடி கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்டதில் கடந்த செப்.30ம் தேதி வரை 1901.89 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சுயவேலைவாய்ப்பு மற்றும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காகவும், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் வசதியாக்கல் முகாமினை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த திட்டமிட்டு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி அரசு துறைகளான மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தாட்கோ ஆகியவற்றினால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வாயிலாக கடன் வழங்க அனைத்து வங்கிகளையும் இணைத்து மாபெரும் கடன் வசதியாக்கல் முகாம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் திட்டங்களில் வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தினர். வங்கி மண்டல மேலாளர்கள். வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், வங்கி மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஆண்டு இலக்கீடாக ரூ 3214.45 கோடி கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்டதில் கடந்த செப்.30ம் தேதி வரை 1901.89 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் திட்டங்களான படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP). பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS). அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.(AABCS) பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டம்(PMFME) சிறு தொழில் கடன்கள், தாட்கோ மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் ஆகிய துறைகளின் மூலமாக 745 பயனாளிகளுக்கு ரூ.24.92 கோடி மானியத்துடன் கூடிய கடன் இம்முகாமில் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.