தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும்  கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் 9ம் தேதி காலை 8  மணி முதல் மதியம் 3 மணி வரை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தஞ்சாவூரில் நடத்தப்பட உள்ளது.


இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.


இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ. கல்வி தகுதிகளுக்குரிய வேலைநாடுவோருக்கு 1000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை அளிக்க உள்ளனர். இம்முகாமில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சேர்ப்பும் நடைபெறுகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனையும் மற்றும் சுயத்தொழில் தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.


இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை. கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.


இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மேலும் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037  தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்.


இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் பரமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தனியார் துறை நிறுவனங்களை ஒருங்கிணைத்து எந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதோ அவர்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்யும் வகையில் இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் தகுதியுள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் ஆண்கள் மற்றும் பெண்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.