தஞ்சாவூர்: மழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழைக்கு உரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் வீரப்பன், கவுவரதலைவர் ராமதாஸ், துணைத்தலைவர் தேவராஜன், நிர்வாக குழு உறுப்பினர் சேரன்குளம் செந்தில்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பாட்ஷாரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் மணி வரவேற்றார்.


கூட்டத்தில் தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, இதர பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும். பேரிடர் நிவாரண நிதி தற்போது எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அதனை தற்போது ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.


சம்பா கொள்முதலில் முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் விவசாயிகளுக்கு இழப்பீடு எற்படுத்தாமல் கொள்முதல் செய்ய வேண்டும்.  நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னக்கு ரூ.5 ஆயிரம் என உயர்த்த வேண்டும். வருகிற ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோாரிக்கை மனு அளிப்பது என்ன உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மாநகர செயலாளர் அறிவு நன்றி கூறினார்.


தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சம்பா, இளம் தாளடி நெற் பயிர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் வெற்றிலை, வாழை, கரும்பு பயிர்களும் பாதிப்பை சந்தித்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடன் இதற்குரிய தீர்வை அளிக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.