தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178 வது ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது.


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சித்தியடைந்த பகுள பஞ்சமி தினத்தில் ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்கள் நடைபெறும். இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள சங்கீத வித்வான்களும், இசை கலைஞர்களும் திருவையாறில் நடக்கும் ஆராதனை விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்பது வழக்கம். அதேபோல் இந்தாண்டு விழா  வரும் ஜன. 14ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை 5 நாட்கள்  நடைபெற உள்ளது.


 பந்தக்கால் முகூர்த்த விழா: 


ஆராதனை விழாவை முன்னிட்டு இன்று காலை (22ம் தேதி) பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.  பின்னர் தியாக பிரம்ம மகோற்சவ சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பொருளாளர் கணேஷ், அறங்காவலர்கள் டெக்கான் மூர்த்தி, சுந்தரம், உறுப்பினர்கள் சுதாகர் மூப்பனார், நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  


இதையும் படிங்க: GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு


விழா துவக்கமாக வரும் ஜன., 14ம் தேதி மாலை 5 மணிக்கு மங்கள இசை, துவக்கவிழா நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராதனை விழாவில் 18ம் தேதி காலை 5:30 மணி முதல் 8:30 மணி வரை ஊஞ்சவிருத்தி பஜனை நிகழ்ச்சியும்,  8:30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், காலை 9 மணி முதல் 10:00 மணி வரை ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர், இரவு 7:30 மணிக்கு தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலமும் மற்றும் ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.


பின்னர் அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் நிருபர்களிடம் கூறியதாவது:
சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா வரும் ஜன.14ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடக்கிறது. தொடக்க விழா நிகழ்ச்சியில் தியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் எம்.பி., ஜி.கே.வாசன், தஞ்சை மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 18ம் தேதி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா நடக்கிறது.  தேசிய நிகழ்ச்சியான அன்றைய தினம் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். அன்றைய தினம் சங்கீத வித்வான்கள்,  வித்வாம்சினிகள் உட்பட ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்துகின்றனர். விழா நடைபெறும் 5 நாட்களிலும் பல்வேறு கலைஞர்கள் பங்கேற்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


இதையும் படிங்க: இவர் நடிப்புக்கு ஆஸ்கர் குடுங்கப்பா...அல்லு அர்ஜூனை கழுவி ஊற்றும் ரசிகர்கள்


விழாவிற்கான ஏற்பாடுகளை சபா தலைவர் எம்.பி., ஜி.கே.வாசன் ஆலோசனையின் படி, அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார். சுரேஷ் மூப்பனார், கணேசன், பஞ்சந்தம், டெக்கான் மூர்த்தி, சுந்தரம், மிதுன்மூப்பனார், காரியதரிசிகள் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ், உதவி செயலாளர்கள் கோவிந்தராஜன், அருண்,  பாபநாசம் அசோக்ரமணி, ராஜகோபாலன்,  ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.