தஞ்சாவூர்: டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற தஞ்சை மாணவ, மாணவிகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முயற்சி உடையவனின் வளர்ச்சியை யார் நினைத்தாலும் தடுக்க இயலாது. சூரியனின் ஒளிக்கதிரை கைக் கொண்டு மறைத்திட இயலுமா. அதுபோல்தான் முயற்சி உடையவர்களை புதைத்தாலும் விதையாக மாறி மரமாக முளைத்து எழுந்து நிற்பார்கள். தொடங்கும் இடத்தில் இருந்து பார்க்கும்போது பாதை முடிவது போல தெரியும். அது முடிவல்ல முயற்சியும், நம்பிக்கையும் கொண்டு பயணத்தை தொடர்ந்தால் இலக்கு தெரியும்.
நம் பாதை இதுவென்று புரியும். முடியும் என்று தெரிந்தால் முயற்சி செய்யாமல் இருக்கவே கூடாது. முடியாது என்று நினைத்தால் பயிற்சி எடுக்க வேண்டும் முயற்சி செய்வதற்கு. அப்போதுதான் வெற்றி நம் வசப்படும். சிக்கல்கள் வாழ்க்கையில் வருவதற்கு காரணம் நம்மை சிதைக்க அல்ல... சிறப்பான வாழ்க்கைக்கு செதுக்க என்று நினைத்தால் சாதனைக் கொடியை நாம் ஏற்றுவது வெகு தூரத்தில் இல்லை.
உன்னை ஏளனம் செய்து தூக்கி வீசிபவர்கள் முன்பு நீ தூசி அல்ல சிகரம் என்பதை உணர்த்த உயர்ந்த நிற்க வேண்டும். அடுத்த தடவை அவர்கள் உன்னை அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு. இதற்கான வெற்றி உன் உழைப்பில்தான் உள்ளது. ஒரு செயலை செய்ய விரும்பும் போது பேசுவதை நிறுத்தி விட வேண்டும். அடுத்த தடவை பேசும் போது அந்த செயல் சாதனையான செய்து முடித்து இருக்க வேண்டும். இதுவே உண்மையான உழைப்பின் முதல் படிக்கட்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
உங்களுக்காக நீங்கள்தான் சிந்திக்க வேண்டும். அது தவறாக இருந்தாலும்... அடுத்தமுறை சரியாக சிந்திக்க முடியும். 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி' என்றார் பாரதி. அதுபோல் தஞ்சை கிங்கு சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா அகாடமி தலைவரும் பயிற்சியாளருமான அன்பரசன், பயிற்சியாளர் ஆபிரகாம் ஆகியோர் தலைமையில் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டில் தஞ்சையை சேர்ந்த மாணவ, மாணவிகள் வெற்றிப் பெற்று பெருமையை சேர்த்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 17, 18 ஆகிய நாட்களில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடைபெற்றது. 8 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நடந்த இந்த போட்டியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன்படி தமிழகம் சார்பில் தஞ்சை கிங்கு சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா அகாடமி தலைவரும் பயிற்சியாளருமான அன்பரசன், பயிற்சியாளர் ஆபிரகாம் ஆகியோர் தலைமையில் அகடமியை சேர்ந்த 9 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இவர்கள் அனைவரும் வெற்றி பெற்று 5 தங்கப்பதக்கங்கள், 4 வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். தொடர்ந்து தஞ்சை ரெயில் நிலையத்தில் சாதனை படைத்த 9 மாணவ- மாணவிகள், அவர்களுக்கு பயிற்சி அளித்த அகடாமி தலைவரும் பயிற்சியாளருமான அன்பரசன், பயிற்சியாளர் ஆபிரகாம் ஆகியோரை பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ், மாவட்ட பொருளாளர் வினாயகம் மற்றும் சக கராத்தே மாணவ -மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.