தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் தாங்கள் அடகு வைத்த நகைகளை திருப்பித் தராமல் தலைமறைவான அடகு கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


தஞ்சாவூர் கீழவாசல் டவுன் போலீஸ் ரோடு பகுதியில் ஒரு தனியார் அடகுகடை இயங்கி வந்தது. இந்த கடையில் தஞ்சை நகர் பகுதியை சேர்ந்த பலரும் தங்களின் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று இருந்தனர். இவ்வாறு பணம் பெற்றவர்கள் பணத்தை முழுமையாக செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு நகைகள் திருப்பி தரப்படவில்லை.


இவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த நகை அடகு கடைக்கு  சென்று பார்த்துள்ளனர். ஆனால் கடை தொடர்ந்து பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனால் அடகு கடை உரிமையாளர் வீட்டிற்கும் சென்று பார்த்துள்ளனர். வீடும் பூட்டப்பட்டிருந்தால் சந்தேகம் அடைந்த நகை அடகு வைத்தவர்கள் அக்கம்பக்கத்தில் விசாரித்த பொழுது அடகு கடை உரிமையாளர் தலைமறைவாகிவிட்டதாக தெரிய வந்துள்ளது.



இந்த நகை அடகு கடையில் ரூ. 5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் என  நகைகள் அடகு வைத்து பணம் திரும்ப கட்டியவர்கள் நேற்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் பணம் கட்டிய ரசீது உட்பட ஆவணங்களை இணைத்து மாவட்ட கலெக்டர் இடம் மனுவாக அளித்தனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது: 


எங்களின் அவசர தேவைக்காக கீழவாசல் ஆர்.ஏ.வளாகம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோடு பகுதியில் இயங்கி வந்த தனியார் நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றோம். பணத்தை திருப்பி செலுத்தியும் எங்களுக்கு நகைகள் வழங்கப்படவில்லை. அடகு கடை மற்றும் உரிமையாளர் வீடு பூட்டப்பட்டுள்ளது. இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் நகைகளை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தஞ்சாவூர், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கத்தினர் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் ராக்கின் ராஜ் தலைமையில், மண்டல பாலச்சந்தர், மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில்  தெரிவித்துள்ளதாவது:


நாங்கள் வர்ணம் பூசுதல் மற்றும் கட்டிட வேலை செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். தற்போது தொடர்ந்து பெய்த கனமழையால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக வேலை இன்றி மிகுந்த சிரமத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். மேலும் குழந்தைகளின் கல்வி கட்டணத்தையும் கட்ட முடியாத நிலை உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 3500 பெயிண்டர்கள் காண்ட்ராக்ட் பணியை எடுத்து செய்து வருகிறோம். தற்போதைய மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு நிவாரண உதவி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.