தஞ்சாவூர்: ஹரியானா மாநிலம் பஞ்சகுல்லாவில் நடந்த தேசிய அளவிலான உறைவாள் (sqay) போட்டியில் தஞ்சையை சேர்ந்த மாணவி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.


ஹரியானா மாநிலம் பஞ்சகுல்லாவில் உள்ள தேவிலால் விளையாட்டு மைதானத்தில், 25-வது தேசிய அளவிலான உறைவாள் விளையாட்டு போட்டிகள் கடந்த டிச.7-ம் தேதி முதல் 9 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்து 1,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 




இதில் தமிழகத்திலிருந்து பொறுப்பாளர்கள் ஈரோடு குணசேகரன், கும்பகோணம் செல்வம் ஆகியோரது தலைமையில் 70 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள்  11 வயது, 14, 18 வயதுகுட்பட்டோர் பிரிவுகளில் சிறப்பாக விளையாடினர். தமிழக மாணவர்கள் மட்டும் 19 தங்கம், 23 வெள்ளி, 34 வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.


இந்த போட்டிகளில் தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் தரிஷினி 18 வயதுகுட்பட்டோர் பிரிவில் தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மாணவி தரிஷினி கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வெள்ளி பதக்கம் வென்ற மாணவியை உறவினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். இம்மாணவி உறைவாள் சண்டை விளையாட்டு போட்டியில் கடந்த 8 ஆண்டுகளாக பயிற்சி பெற்று, மாவட்ட, மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். நேபாளம் நாட்டில் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உறைவாள் சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, நேபாளம், கொரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.


இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தர்ஷினி முதலிடம் பெற்று தங்க பதக்கம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.