தஞ்சாவூர்: மத்திய அரசின் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டத்தின் நிலை என்ன. தமிழக அரசுக்கு மாவட்ட வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? தஞ்சை தொகுதியில் தேசிய அளவிலான திட்டங்கள் நடத்த அரசு ஏதேனும் முன்மொழிந்துள்ளதா என்று மக்களவையில் தஞ்சை எம்.பி., முரசொலி எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் தஞ்சை எம்.பி.,யின் தொடர் கேள்விகள்
தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மக்களவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதில் மத்திய அரசின் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டத்தின் நிலை என்ன. தமிழக அரசுக்கு மாவட்ட வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? தஞ்சை தொகுதியில் தேசிய அளவிலான திட்டங்கள் நடத்த அரசு ஏதேனும் முன்மொழிந்துள்ளதா? இல்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன? என கேள்வி எழுப்பினார்.
மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டம்
அதற்கு மத்திய அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புவி அறிவியல்களுக்கான துறையின் துணை அமைச்சரான ஜிதேந்திர சிங் எழுத்து மூலமாக பதில் அளித்தார். அதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டம் செயல்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான சூழலை மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்கான நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
அறிவியல் தொடர்பு மற்றும் பிரபலப்படுத்துதல்
இத்திட்டத்தின் கீழ் 6 விதமான நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிறுவன மற்றும் மனித திறன் உருவாக்கம், புத்தாக்கம், சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் அறிவியல் தொடர்பு மற்றும் பிரபலப்படுத்துதல் மற்றும் மாநில கொள்கைகள், அதுமட்டுமல்லாமல், அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் நிரல் காப்புரிமை தகவல் மையங்களையும் இத்திட்டம் ஆதரிக்கிறது.
மாநில கவுன்சில்கள் நிறுவப்பட்டது
தமிழ்நாடு மாநிலம் உட்பட மாநில கவுன்சில்களில் நிறுவப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் எளிதாக்குகிறது. இத்திட்டத்தின் மூலம் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ. 3.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு குறித்த விபரம்
தஞ்சை தொகுதியில் சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் ரூ. 658.86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ. 30.17 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்திற்கு ரூ. 86.95 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசிய அறிவியல் தினம் மற்றும் தேசிய கணித தினம் கொண்டாடுவதற்காக ரூ. 20 லட்சம் வழங்கப்படுகிறது.
பயோ டெக்னாலஜி துறையில் 6 திட்டங்களுக்கு நிதி
பயோடெக்னாலஜி துறையில் ரூ. 896.01 லட்சம் மதிப்பில் 6 திட்டங்களுக்கு நிதியளித்துள்ளது. மேலும் பான் செக்கர் மகளிர் கல்லூரி மற்றும் வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி (தன்னாட்சி) ஆகிய இரண்டு கல்லூரிகளுக்கும் ரூ.249.62 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.