தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் புதுகல்விராயன் பேட்டை டூ சித்திரக்குடி வரையில் மிகவும் பழுதடைந்து வாகன ஓட்டுனர்களை அவதிக்குள்ளாகியுள்ளது. தற்போது டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த சாலையில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தடுமாறி விழுந்த விபத்துக்குள்ளாகின்றனர்.
தஞ்சை மாவட்டம் புதுகல்விராயன்பேட்டையில் சாலையின் பல இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளத்தில் தடுமாறி விழும் நிலை உள்ளது.
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி அருகே உள்ளது புதுகல்விராயன்பேட்டை. இப்பகுதியிலிருந்து சித்திரக்குடி செல்லும் சாலை மிகவும் சீர்கேடாக பள்ளம், படு குழியாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் வண்ணாரப்பேட்டை, 8. கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் உட்பட பல பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான கார், ஆட்டோ, லோடுவேன், லாரி, டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் சித்திரக்குடி, பூதலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பணி முடித்து இருச்சக்கர வாகனத்தில் இரவில் இந்த சாலை வழியாகத்தான் ஊருக்கு திரும்புகின்றனர்.
இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் இந்த சாலையில் பல இடங்கள் பழுதடைந்து உள்ளது. புது கல்விராயன் பேட்டையிலிருந்து சித்திரக்குடி வரை சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் சாலை பள்ளங்களாக மாறி உள்ளது. வலதுபுற சாலையிலும் பள்ளம் இருக்கிறது என்று இடதுபுறம் வந்தால் அங்கும் பள்ளங்கள் இருக்கிறது. இதனால் வாகனங்களும் பழுதாகின்றன.
இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கிடையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது தெரியாமல் பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி விழுந்த விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும் சாலையின் இருபுறமும் பள்ளங்கள் இருப்பதால் எதிர் எதிரில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலையே உள்ளது. பணி முடிந்து வருபவர்கள் இதனால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே புது கல்வியராயன் பேட்டையிலிருந்து சித்திரக்குடி வரை பழுதான நிலையில் பள்ளமாக மாறியுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இந்த சாலை வழியாகத்தான் தஞ்சாவூருக்கு செல்ல வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் சாலையில் அதிகளவில் பள்ளங்கள் இருபுறமும் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பள்ளத்தில் தடுமாறில் வயலில் விழும் நிலையும் உள்ளது.
எனவே இந்த சாலையை அகலப்படுத்தி முழுமையாக சீரமைத்து தர வேண்டும். இதேபோல் ஆலக்குடி அருகே சிவகாமிபுரம் மெயின் ரோடும் மிகவும் பழுதடைந்து பெரிய அளவில் பள்ளங்களாக மாறி உள்ளது. இதையும் சீரமைக்க வேண்டும். இந்த பகுதிகள் வழியாகத்தான் வயலுக்கு தேவையான இடுபொருட்களை வாகனத்தில் கொண்டு வரும் நிலை உள்ளது. இந்த சாலைகளை முழுமையாக சீரமைத்து கொடுத்தால் விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்றனர்.