தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வாழை இலைகள் தேக்கமடைந்து விட்டது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மிகவும் குறைவான விலைக்கு கூட வியாபாரிகள் வாங்காதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


தமிழர்கள் முக்கியமாக விருந்தோம்பல் உணவினை வாழை இலை கொண்டு தான் பரிமாறுவர். வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.


வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள்  நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.




 
வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு பிரத்யேக சுவையும் மணமும் உண்டு. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்.


இத்தகைய பெருமைகளும், நன்மைகளும் கொண்ட வாழை இலை தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. முக்கியமாக திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் காவேரி படுகை, குடமுருட்டி படுகை, வெண்ணாற்று படுகை என படுகை பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக  விவசாயிகள் வாழையை அதிகப்படியாக பயிரிட்டு வருகிறார்கள். வாழை இலைக்காக மட்டும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சுமார் 20,000 ஏக்கருக்கு மேலாக  வாழை சாகுபடி செய்து உள்ளார்கள். 


தற்போது தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வாழை இலைகள் தேக்கமடைந்து உள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விற்ற விலைக்கே வாழை இலை விற்பனையாவதாக கூறப்படுகிறது.


கார்த்திகை மாதத்தில் மட்டும் வாழை இலை அதிக அளவில் விற்பனையாகும். காரணம் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து பொதுமக்கள் விரதம் இருப்பார்கள். அப்போது வாழை இலையில்தான் உணவு சாப்பிடுவார்கள். இதற்காக வியாபாரிகள் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே விவசாயிகளிடம் முன் பதிவு செய்து கொள்வார்கள். ஒரு ஏடு நான்கு ரூபாய் வரை கடந்தாண்டு விற்பனையானது. ஆனால் இந்த வருடம் தொடர்ந்து மழையின் காரணமாக வாழை இலை 10 வருடங்களுக்கு முன்பு ஒரு ஏடு இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த விலைகே;கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்த வருடம் வாழை இலை விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.


இரண்டு ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். தற்போது திருவையாறு உட்பட பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்வதால் குறைந்த விலைக்கு கூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் அச்சப்பட்டு முன் வருவதில்லை. இதனால் 3 நாட்களாக அறுக்கப்பட்ட இலைகள் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டு தேக்கமடைந்து உள்ளது.


சென்னை மதுரை போன்ற பெருநகரங்களுக்கு வியாபாரிகள் இலைகள் வாங்கிச் செல்வார்கள். அங்கும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இலை விற்பனையானது கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர். தமிழக அரசு ஊக்கத்தொகையாக வாழை விவசாயிகளுக்கு வங்கி மூலமாக வட்டி இல்லாத கடன் வழங்கி உதவி செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.