தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருவையாறு மருவூர் பகுதியை  சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக இன்று காலை 5 மணியளவில் 108 ஆம்புலன்ஸ்சில் அழைத்து செல்லும் போது வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை பொதுமக்கள் பாராட்டினர்.



தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா மருவூரை சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி புவனா மேரி (22). இவர் 3 வது பிரசவத்திற்காக தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்சை அழைத்தனர். தகவலறிந்ததும் மருவூர் 108 ஆம்புலன்ஸ் தினகரன் வீட்டிற்கு விரைந்து சென்று புவனா மேரியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தது. சிறிது தூரத்திலேயே புவனா மேரிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.

உடன் துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக் பாபு சாலையோரம் ஆம்புலன்ஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து கர்ப்பிணி பெண் புவனா மேரிக்கு அவசர மருத்துவ உதவியாளர் மனோஜ் உடனடியாக பிரசவம் பார்த்தார். இதில் புவனா மேரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு அவரை அருகில் உள்ள திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாயையும், குழந்தையையும் அனுமதித்தனர். இதைக்கண்ட நோயாளியின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக் பாபு மற்றும் மருத்துவ உதவியாளர் மனோஜ் ஆகியோரை பாராட்டினர்.

இதேபோல் கடந்த 4ம் தேதி தஞ்சை அருகே திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ்சில் அழைத்து செல்லும் போது வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா இளங்காடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி ராஜேஸ்வரி (25). இவர் 3வது பிரசவத்திற்காக மாரநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக டாக்டர்கள் தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி 108 ஆம்புலன்ஸ் மாரநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கர்ப்பிணி பெண்ணான ராஜேஸ்வரியை அழைத்துக்கொண்டு தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது வல்லம் பைபாஸ் பகுதியில் செல்லும் போது ராஜேஸ்வரி திடீரென பிரசவ வலி கதறினார். உடன் துரிதமாக செயல்பட்ட டிரைவர் அரவிந்த் சாலையோரம் ஆம்புலன்ஸ்சை நிறுத்தினார்.

தொடர்ந்து கர்ப்பிணி பெண் ராஜேஸ்வரிக்கு மருத்துவ உதவியாளர் ரம்யா பிரசவம் பார்த்தார் இதில் ராஜேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயையும், சேயையும் தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அனுமதித்தனர். அங்கு தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.