தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று நடைபெற்றது.


இதில் அவர் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 465 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ ஆலிவர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினையும், முதலமைச்சர் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு பணி துவங்குவதற்கான நிர்வாக அனுமதி ஆணையினையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் பாபநாசம் தாலுக்கா, பசுபதிகோவில்,  புனித சவேரியார் கோவில் தெருவை மாற்றுத்திறனாளி குணசேகரன் என்பவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நான் ஒரு மாற்றுத்திறனாளி. எம் பி ஏ ., பி எட்., படித்திருக்கிறேன். எனது ஊரில் நான் பெட்டிக் கடை ஒன்று நடத்தி வருகிறேன். வேலை வாய்ப்பு இல்லாதக் காரணத்தால் எனக்கு இ-சேவை மையம் வைத்து நடத்த உதவி புரிந்திட வேண்டுமென்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய ரிமோட் வீல் சேர் வழங்கி உதவும்மாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.





இதேபோல் அரசு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கலெக்கரிடம் நாட்டுப்புற பாடல் பல்சுவை கலைக்குழுவை சேர்ந்தவர் மனு அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது இதில் தஞ்சாவூரை சேர்ந்த வளப்பக்குடி  வீரசங்கர் என்பவர் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு மேடை நிகழ்ச்சிகள், அரசு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை எங்களது நாட்டுப்புறப் பாடல் பல்சுவை கலைக்குழு சார்பில் நடத்தி உள்ளேன். மேலும் போலியோ விழிப்புணர்வு, குடும்ப கட்டுப்பாடு, மழைநீர் சேகரிப்பு, கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு போன்ற அரசு திட்ட விளம்பர விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடத்தி உள்ளேன்.

தற்போது பெரிய அளவில் கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படாததால் எங்கள் கலைக்குழுவின் வாழ்வாதாரத்துக்காக அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகள் செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.