அதிகாரிகளே என்னை கொஞ்சம் பார்ப்பீங்களா? உங்கள் பார்வைப்படுமா?

அதிகாரிகளே என்னை கொஞ்சம் பார்ப்பீங்களா? உங்கள் பார்வை படுமா? என்று வாய் இருந்தால் கேட்டுவிடும் நடைபாதை கம்பி. எங்கு தெரியுங்களா?

Continues below advertisement

தஞ்சாவூர்: அதிகாரிகளே என்னை கொஞ்சம் பார்ப்பீங்களா? உங்கள் பார்வை படுமா? என்று வாய் இருந்தால் கேட்டுவிடும் நடைபாதை கம்பி. எங்கு தெரியுங்களா?

Continues below advertisement

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்

தஞ்சாவூர் என்றாலே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர் தான். சுற்றுலாப்பயணிகளின் முக்கிய தேர்வாக தஞ்சாவூர் பட்டியலில் இடம் பிடிக்கும். காரணம். உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில், தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால் நூலகம், சிவகங்கை பூங்கா, பீரங்கி மேடு, ராஜ ராஜ சோழன் மணி மண்டபம் என்று ஏராளமான வரலாற்று சிறப்புகள் தஞ்சாவூரில் அடங்கி உள்ளது. தினம் தினம் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. 

இந்தோ- சராசனிக் கட்டடக் கலை பாணி

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயில் எப்போதும் அனைவருக்கும் மலைப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். அதேபோல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம், பிரிட்டிஷ் கட்டட வல்லுனர் ராபர்ட் சிஷோலம் என்பவரால், 1896 முதல் 1900 ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. இந்தோ- சராசனிக் கட்டடக் கலை பாணியை சார்ந்த இந்த கட்டடத்தில், 120 ஆண்டுகளாக, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

தஞ்சாவூர் - திருச்சி- தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம் 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து, அருங்காட்சியகமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ. 8.4 கோடி மதிப்பீட்டில், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதையும் பார்வையிட பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர்.

நடைபாதை கம்பி சீரமைக்க வேண்டும்

இந்த அருங்காட்சியகம் எதிரில் சேதமடைந்த நடைபாதை கம்பியை சீரமைக்க வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியமான கோரிக்கையாக எழுந்துள்ளது. தஞ்சை பழைய கோர்ட் சாலையில் அருங்காட்சியகம், ஆயுதப்படை மைதானம், தாசில்தார் அலுவலகம்,  மற்றும் கடைகள் அதிகளவில் அமைந்துள்ளன. இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி பழைய கோர்ட் சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டது.

நடைபாதையின் ஓரங்களில் தடுப்புக்கம்பிகள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமின்றி நடந்து சென்று வந்தனர். போக்குவரத்து எப்போதும் அதிகம் இருக்கும் இந்த சாலையில் நடந்து செல்வது என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விஷயம். நடைபாதை அமைக்கப்பட்டதற்கு பின்னர் மிகவும் பாதுகாப்பாக சுற்றுலாப்பயணிகள் நடந்து சென்று வந்தனர். தற்போது நடைபாதை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது.

தளக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது

நடைபாதையில் உள்ள தடுப்பு கம்பிகள், தளக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. நடைபாதையில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் கற்கள் கொட்டப்பட்டு இருக்கின்றன. இவற்றால் பொதுமக்கள் நடைபாதையில் சிரமத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும், நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகம்பிகள் சேதமடைந்து இருக்கிறது. ஒருசில இடங்களில் தடுப்புகம்பிகளை மர்மநபர்கள் பெயர்த்து எடுத்து சென்று உள்ளனர்.

அதிகாரிகள் கண்பார்வை கிடைக்குமா?

ஆங்காங்கே தடுப்பு கம்பிகள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் இருக்கிறது. நடைபாதை சேதமடைந்து இருப்பதால் அருங்காட்சியகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் கடைகளுக்கு வருபவர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள நடைபாதையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola