தஞ்சாவூர்: மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அஜாக்கிரதையால் 10 மாத குழந்தை உயிரிழந்ததாக கூறி தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தையின் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை அருகே மடிகை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற பத்து மாத குழந்தை உள்ளது. இவர்கள் நேற்று அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 


இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய சில மணி நேரத்திலேயே குழந்தையின் உடல் குளிர்ச்சிடைந்துள்ளது. இது குறித்து கீதா தனது கணவர் சதீஷ்குமாருக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் குழந்தையை எடுத்துக் கொண்டு காசநாடு புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர்.


அங்கு இருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து நான்கு ஊசிகள் போட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் குழந்தையின் உடலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குழந்தையை தனது காரில் அழைத்துக்கொண்டு தஞ்சாவூருக்கு புறப்பட்டுள்ளார்.


மேலும் அவர் மருத்துவமனைக்கு செல்லும்போது பாதி வழியிலேயே மீண்டும் திரும்பி காசநாடு புத்துருக்கு சென்றதாக கூறப்படுகிறது. குழந்தையின் உடல் உடல்நிலை மேலும் பாதிப்படைய தொடங்கிய நிலையில் மீண்டும் காசநாடு புதூரிலிருந்து தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழந்தைக்கு மேலும் 4 ஊசிகள் போட்டுள்ளனர். இதற்கிடையில் குழந்தையின் நிலை தெரிந்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை முன்பு திரண்டனர்.


இந்நிலையில் ஊசி செலுத்தி சிறிது நேரத்தில் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது. இதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அஜாக்கிரதையால் தான் குழந்தை உயிரிழந்து உள்ளதாக தெரிவித்து மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலைந்து செல்லாமல் வெகுநேரம் போராட்டம் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது.


இதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டு மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.