நம் வாழ்வில் நிறைய கொண்டாட்டங்கள் இருந்தாலும், தனக்கே தனக்காக கொண்டாடப்படும் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பான ஒன்றே. அன்றைய தினம் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவிப்பதும், பிறந்தநாள் பரிசுகளை வழங்குவதும், அந்த வாழ்த்துகள் மூலம் அன்றைய நாள் முழுவதும் ஒரு மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும்.
பிறந்தநாள் வாழ்த்துகளை நெருங்கிய உறவுகளும், உற்ற தோழமைகளும் கூட மறந்துவிட்டு, வாழ்த்து கூறாமல் போவதுண்டு. அவர்களின் வாழ்த்துகளை பலரும் எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் கடந்த தருணங்களும் இருந்திருக்கும். அதே நாளில் நமக்கு தெரியாத புதியவர்கள் நமது பிறந்த நாளை அறிந்து வாழ்த்துக்களை கூறும்போது, ஓர் அலாதியான மகிழ்ச்சி பிறக்கும். நமது வாழ்வில் யாரோ ஒருவர் நமக்காக நமது பிறந்தநாளை குறித்து வைத்து வாழ்த்து சொல்வதும், பரிசு வழங்குவதும் நமக்கு ஆகப்பெரிய மகிழ்ச்சியை தரும். இதை கேட்பவர்களுக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மணிக்கூண்டு அருகில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருபவர் சுகுமார். இவர் கடந்த 45 ஆண்டுகளாக இப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு ஆடைகள் வாங்க வருபவர்களை, குறிப்பாக குழந்தைகளுடன் வருபவர்களின் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் கடையில் குழந்தைகள் விளையாட மரக்குதிரைகள், பொம்மைகள் என விதவிதமான விளையாட்டு பொருட்களை குழந்தைகள் விளையாடும் வண்ணம் வைத்துள்ளார்.
அது மட்டுமின்றி தனது கடைக்கு வரும் அனைத்து குழந்தைகளின் பெயர் மற்றும் பிறந்த தேதியினை கேட்டு, டைரியில் எழுதி வைத்து கொண்டு, தினமும் அன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளின் பெயரை ஒரு போர்டில் எழுதி, தனது கடை முன்பு வைத்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார். அதோடு நின்றுவிடாமல் மாதம் ஒரு முறை அந்த குழந்தைகளின் பெயரை சீட்டில் எழுதி, குலுக்கல் முறையில் ஒரு குழந்தையை தேர்வு செய்கிறார். அந்த குலுக்கலும் குளறுபடி வந்துவிட கூடாது என்பதற்காக குலுக்கல் நடைபெறும் நாள் அன்று கடைக்கு ஆடை எடுக்க வருபவர்களின் குழந்தையின் கையால் எடுக்க வைக்கிறார். பிறந்தநாள் பரிசாக 1000 ரூபாய் மதிப்புள்ள பரிசையும் வழங்கி வருகிறார்.
மேலும் இவர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக வாழ்த்துகள் தெரிவிப்பதை வழக்கமாக செய்து வருவதும், முன்பெல்லாம் கடிதம் மூலம் வாழ்த்துகள் கூறிய நிலையில் தற்போது தொலை தொடர்பு சாதனங்கள் வளர்ச்சியின் காரணமாக வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருவதாக கூறுகின்றனர். இது வியாபாரயுக்தி என சிலர் கூறினாலும், இவரின் இந்த செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்