தஞ்சாவூர்: புதுமைபெண் திட்டம் தொடர்பாக கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரை மாணவிகள் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டமானது 2022ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வீதம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
விரிவுப்படுத்தப்பட்டுள்ள திட்டம்
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில் 2024-2025ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2023-2024 ஆம் கல்வியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மொத்தமாக 8325 மாணவிகள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பிற்காக பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் சேரும் அனைத்து மாணவிகளும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் புதிய கணக்கு தொடங்கி இத்திட்டத்தில் பயனடையுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், புதுமைபெண் திட்டம் தொடர்பாக கல்வி நிறுவனங்களிள் முதல்வர்கள், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், திருநங்கைககளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும். சமூக அங்கீகாரத்ததை அளித்து, அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் திருநங்கைகள் நல வாரியம் 2008 இல் அமைக்கப்பட்டது.
திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து திருநங்கையருக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து 21.06.2024 அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கம், மாவட்ட ஆட்சியரகத்தில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விபரங்கள் தெரிந்து கொள்ள அணுகலாம்
இம்முகாமில், அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான பாரத் அட்டை பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் இதற்கான விபரங்களை அறை எண்.303, 3-வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.