தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மையே சேவை 2024 என்ற தலைப்பில் வரும் அக்.2ம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.


வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஊக்குவிப்பது


கிராம பகுதிகளில் தூய்மை சுகாதாரம் மற்றும் திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையினை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த ஊக்குவிப்பது, சமூக ஊக்குவிப்பாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை நிறுவனங்கள் மூலம் கிராமப்புறங்களில் சுகாதாரம் குறித்து கல்வி மற்றும் விழிப்புணாதர்வுகள் செய்து அப்பகுதிகளில் நீடித்த நிலைத்த சுகாதாரத்தினை ஏற்படுத்துதல் போன்றப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்த சுகாதாரத்தினை ஏற்படுத்தும் பயனுள்ள தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல் கிராமப்புறங்களில் தூய்மைக்காக திட மற்றும் திரவ கழிவுகளை அகற்ற தூய்மைப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்றவை தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன.


தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி பேரணி


அதன்படி தஞ்சை மாநகராட்சி சார்பில் ரயிலடியில் "தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி" என்ற தலைப்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மேயர் சண்.இராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.


மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்


இப்பேரணி தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து அண்ணா நூற்றாண்டு அரங்கம் வரை நடைபெற்றது. தூய்மையே சேவை முகாமில் வரும் 19ம் தேதி பெரிய கோயில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாபெரும் கூட்டுத் தூய்மை பணி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாட்களும் தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. 


23ம் தேதி குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியில் "தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி" என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. 24ம் தேதி தஞ்சாவூரில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் "தூய்மையே சேவை" என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பொது இடங்களில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. செப்டம்பர் 28, 29 மற்றும் 30 தேதிகளில் தஞ்சாவூரில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் கூட்டுத் தூய்மை பணி நடைபெற உள்ளது.


சிறப்பாக வீட்டு தோட்டம் அமைத்தவர்களுக்கு பரிசுகள்


அக்டோபர் 1 அன்று சிறப்பாக வீட்டுத் தோட்டம் அமைத்தவர்கள் மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று அன்றாடம் தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து தருபவர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பேரணிக்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் சீனிவாசன் தலைமையில் தூய்மை பாரத இயக்கத்தினர் செய்திருந்தனர்.