தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மும்முரம் அடைந்துள்ள நிலையில் அதை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் குறை மூலம் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ள காரணத்தினால் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர்  ஆணைக்கிணங்க 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த வாய்க்கால்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான நிலங்கள் முழுமையாக பாசன வசதியை பெறும். அதனால் தற்போது இந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளில் வெகு மும்முரம் காட்டப்பட்டு வருகிறது.

Continues below advertisement

வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அரசு அறிவித்து விட்டது. இதனால் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்களின் வயல்களை தயார் படுத்தும் பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கி விடுவர். அதனால் அதற்கு முன்னதாக இந்த சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என்பதால் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்படி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலக வேளாண்மை இணை இயக்குநர் சங்கரசுப்பிரமணியன் தஞ்சாவூர் வட்டம், சீராளுர் கிராமத்தில் உள்ள சக்கரசாமந்தம் 'சி' பிரிவு வாய்க்கால் மற்றும் திருவையாறு வட்டம், திருசோற்றுதுறை கிராமத்தில் உள்ள குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரியும் சோருடையான் 'டி' பிரிவு வாய்க்கால்களில் கள ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் திருப்பனந்தாள் வட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள மண்ணியாறு ஆற்றிலிருந்து பிரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பாசன வாய்க்கால்களையும் கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள விவசாயிகளை சந்தித்து 'சி' மற்றும் 'டி' வாய்க்கால் பணிகளைக் குறித்து கலந்துரையாடினார். மேலும் அவர்களின் கருத்துக்களையும் முழுமையாக தெரிந்து கொண்டார். மேற்படி கலந்துரையாடலின்போது அப்பகுதியில் உள்ள விவசாய பெருமக்கள் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தங்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது என தெரிவித்து  தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும்  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்தனர்,

மேலும் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களை பாராட்டினர். நடப்பாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால்களை தூர்வார 237 கி.மீ. இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 25.05.2025 முடிய 185 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 52 கி.மீ. தூர்வாரும் பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டுமென வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை வழங்கினர்.

இந்த ஆய்வின் போது வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர், வேளாண்மை இணை இயக்குநர், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.