தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 3 வயது குழந்தையின் காதை குரங்கு கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பவே அச்சப்படுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ஆர்.வி., இரண்டாவது நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைவாணி. இந்த தம்பதிக்கு திகழினி(3) என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் காலை வேளையில் கலைவாணி வீட்டு வராண்டாவில் நின்று குழந்தை திகழினிக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று பாய்ந்து வந்த குரங்கு ஒன்று கலைவாணி மீது பாய்ந்து குழந்தையின் காதை கடித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. இதில், திகழினி காது நரம்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. குழந்தையை குரங்கு கடித்து விட்டு ஓடியதால் அதிர்ச்சியடைந்த கலைவாணி அலறி சத்தம் போட்டுள்ளார்.
தொடர்ந்து பெற்றோர் திகழினியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து கலைவாணி கூறியதாவது: எங்கள் பகுதியில் மூன்று மாதங்களாக குரங்கு தொல்லை அதிகம் உள்ளது. நகராட்சியில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. குழந்தைகளை தெருவில் வைத்துக் கொண்டு நிற்க முடியவில்லை. வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து வேலை பார்த்தால் உள்ளே புகுந்து மளிகை பொருட்களை இழுத்து சென்று விடுகிறது. எனவே இனியும் காலம்தாழ்த்தாமல் உடன் குரங்கு தொல்லைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து ஆர்.வி., நகரை சேர்ந்த சரவணன் கூறியதாவது: பட்டுக்கோட்டை பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக குரங்கு தொல்லை அதிகரித்து விட்டது. ஆர்.வி., நகர் பகுதியில் இரண்டு நாய்களை குரங்கள் கடித்து கொன்று விட்டது. ஏற்கனவே மூன்று குழந்தைகளை காயப்படுத்தி விட்டது. வனத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வனத்துறையிடம் கேட்டால், தஞ்சாவூரில் ஆள் இல்லை. ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து ஆள் அழைத்து வர வேண்டும் என கூறுகிறார்கள். தற்போது குரங்கு கடித்து மீண்டும் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
காடு, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் பல்லுயிர்க் கூடாரம். இயற்கையின் சமநிலைப்படி காடுகளில் தங்கள் உணவை, வாழ்வை தகவமைத்துவரும் உயிர்களுக்கு பாதகங்கள் பல வகையில் வருகின்றன. காடுகளை மனிதன் அழிக்கத் தொடங்கியபோது, அந்த உயிர்கள் தங்கள் இருப்பிடத்தை இழக்கின்றன. யானைகள் பலவும் தங்களின் வலசைப் பாதையை மறந்து, வழித்தடம் மாறி நிற்கின்றன. இதன் காரணமாக ஏற்படுகின்ற விபத்து முதலியவற்றால் இறந்தும் போகின்றன.
காட்டுக்குள் வசிக்கும் குரங்குகள், குடியிருப்புப் பகுதிக்கு வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று காட்டுக்குள் அவற்றுக்கு போதுமான உணவு மற்றும் நீர் ஆதாரங்கள் இல்லாதது. இரண்டாவது காரணம், குடியிருப்புப் பகுதிக்கு வந்த குரங்குகளுக்கு உணவுப்பொருள், பிஸ்கெட், பழங்கள் கொடுத்து ஆசை காட்டப்படுவதால். குரங்குகளுக்கு இந்த உணவுப் பொருள்கள் பிடித்துவிட்டால், அவை அங்கேயே தங்கிவிடும். அவற்றை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவது சிரமம். இதனால் குடியிருப்பு பகுதிக்குள் வரும் குரங்குகளுக்கு உணவு வகைகளை கொடுக்கக்கூடாது. குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.