தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா சாகுபடி பயிர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வயலில் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் மகசூல் பாதிக்கப்படும் என்பதால் மிகுந்த கவலையில் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி அறுவடை முடிந்து தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடி 3.25 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, 8நம்பர் கரம்பை, ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, கள்ளப்பெரம்பூர், சீராளூர் உட்பட பகுதிகளில் ஆந்திரா பொன்னி, சி.ஆர்.1009, கோ-51, கோ-50 ரகங்களை சாகுபடி செய்திருந்தனர். இதில் கோ 50, 51, ஆந்திரா பொன்னி ரகங்கள் 135 நாட்கள் பயிராகும். சி.ஆர்.1009 – 160 நாட்கள் பயிர். தற்போது கோ 50, 51, ஆந்திரா பொன்னி ஆகியவை இன்னும் 2 வாரங்கள் சென்றால் அறுவடை செய்து விடலாம் என்ற நிலையில் பயிர்கள் வளர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. ஆரம்பத்தில் இந்த மழை சம்பா பயிர்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் தொடர்ந்து பெய்த கனமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் பயிர்கள் செழித்து வளர உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை தெளித்தனர். இருப்பினும் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி பகுதி சம்பா பயிர்களில் புகையான் தாக்குதல் அதிகம் இருந்தது. மேலும் 8.நம்பர் கரம்பை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் புகையான் மற்றும் நெல் பழம் நோய் தாக்குதல் காணப்பட்டது. காலை மற்றும் இரவு வேளையில் அதிகளவு பனிபெய்ததால் பயிர்கள் பாதிப்பை சந்தித்து வந்தது.
இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சீராளூர், 8நம்பர் கரம்பை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் மகசூல் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி தமிழரசன், முகேஷ், கதிர்வேல் ஆகியோர் கூறுகையில், தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நெல் பழம் நோய் தாக்குதல் தென்பட்டது. இருப்பினும் இன்னும் இரண்டு வாரத்தில் அறுவடை செய்து விடலாம். அதிக பாதிப்பு இருக்காது என்று நினைத்து இருந்தோம். ஆனால் தற்போது 2 நாட்களாக பெய்த மழையில் பாதிக்கு பாதி நெல்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது. இப்போது அறுவடையும் செய்ய முடியாது. வயல் ஈரப்பதமாக இருப்பதால் இயந்திரங்களை வைத்து அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இதுவரை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.
தற்போது ஒரு ஏக்கர் வயலில் ஏறத்தாழ பாதிக்கு பாதி அளவில் நெற் பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது. மழை தொடர்ந்தால் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் முளைக்க தொடங்கி விடும். இதனால் அறுவடை செய்தாலும் செலவு செய்த தொகை கூட கிடைக்காது. எனவே அதிகாரிகள் இப்பகுதிகளை மீண்டும் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது!குறித்து வேளாண் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 22 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது. மழையின் காரணமாக திருப்பனந்தாளில் 100 ஏக்கர், கும்பகோணத்தில் 100 ஏக்கர், பாபநாசத்தில் 50 ஏக்கர் என்று மொத்தம் 250 ஏக்கரில் நெல் பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது என்று தெரிவித்தனர்.