தஞ்சாவூர்: மயிலாடுதுறை – பாலக்காடுக்கு பழனி பொள்ளாச்சி வழியாக நேரடி ரயில் சேவை விரைந்து துவக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை – பாலக்காடு இடையே நேரடி ரயில் இயக்க ஆய்வு
இதுகுறித்து பாபநாசம் ரயில் பயணிகள் சங்க பொறுப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளதாவது: மயிலாடுதுறை-பாலக்காடு இடையே நேரடி ரயில் இயக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்து அதன்படி தற்போது மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே இயங்கும் பயணிகள் சிறப்பு ரயிலை பாலக்காடு டவுன் வரை நீட்டிக்க தென்னக ரயில்வே உத்தேசித்துள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக பழனியை இணைக்கும் வகையில் நேரடி ரயில் இயக்க பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. மயிலாடுதுறை தொகுதி அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தஞ்சாவூர்-பாலக்காடு இடையே புதிய ரயில் இயக்க தொடர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி பயணிகளும் அப்பகுதியிலிருந்து டெல்டா பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்ல வசதியாக கும்பகோணம் வழியாக நேரடி ரயில் அறிமுகம் செய்ய அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கோவை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் மூலம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரயில் இயக்க உத்தேச கால அட்டவணை வெளியீடு
அவற்றின் அடிப்படையில் தற்போது மயிலாடுதுறை-பாலக்காடு டவுன் இடையே நேரடி ரயில் இயக்க முதல் கட்ட நடவடிக்கையை தென்னக ரயில்வே மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து திருச்சி, மதுரை மற்றும் சேலம் கோட்ட மெக்கானிகல் பிரிவிற்கு தென்னக ரயில்வே அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் மயிலாடுதுறை-தஞ்சாவூர் ரயிலை திருச்சி, திண்டுக்கல்,பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு டவுன் வரை நீட்டித்து பாலக்காடு வரை இணைத்து இயக்க உத்தேச கால அட்டவணை வெளியிட்டு அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இசைவு தெரிவிக்க கோரப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறை
விரைவில் இதுகுறித்து ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டு அதன் ஒப்புதலுக்கு பிறகு நேரடியாக இயங்க தொடங்குமென தெரிகிறது. மயிலாடுதுறை-பாலக்காடு டவுன் இடையே நேரடி ரயில் இயக்கப்பட்டால் இந்திய ரயில்வே வரலாற்றில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து முதன் முறையாக பழனிக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும். இதன் மூலம் 6 மாவட்ட பயணிகள் நேரடி ரயில் வசதி பெறுவர். மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதி பயணிகளுக்கு முதன் முறையாக கேரள மாநிலத்திற்கு நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும். மேலும் பாலக்காட்டில் இருந்து குருவாயூர், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லக் கூடிய 16344 அம்ருதா எக்ஸ்பிரஸ் போன்ற வண்டிகளுக்கு இணைப்பு கிடைக்கும்.
கும்பகோணம் – பழனி வழியாக பொள்ளாச்சி ரயிலுக்கு வரவேற்பு
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தாம்பரம்-கோவை இடையே, கும்பகோணம், தஞ்சாவூர், பழனி, பொள்ளாச்சி வழியாக சிறப்பு ரயில் இரண்டு தினம் இயக்கப்பட்டது. அந்த ரயிலுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது மயிலாடுதுறை பாலக்காடு டவுன் இடையே பழனி வழியாக தினசரி நிரந்தர ரயில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
எனவே ரயில்வே நிர்வாகம் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை போன்ற விழா காலங்கள் வருவதன் காரணமாக நடப்பு அக்டோபர் மாதத்திலேயே புதிய இரயிலை இயக்க விரைவாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே டெல்டா பகுதி மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.