தஞ்சாவூர்: குடும்பத்தகராறில் மனைவி மற்றும் 2 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு காரில் தப்பிச் சென்ற கணவர் லாரியில் நேருக்கு நேர் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் வருவது போல் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் தஞ்சாவூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (42). இவரது மனைவி நித்யா (39). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த சுந்தர்கணேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து விலகினார். பின்னர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நித்யா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வீட்டை விற்பனை செய்வது தொடர்பாக கணவன் மனைவி மத்தியில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுந்தர் கணேஷ் மற்றும் நித்யா மத்தியில் கடந்த 3 நாட்களாக கடும் சண்டை நடந்து வந்ததாம். இதனால் உறவினர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை இது தொடர்பாக மீண்டும் கணவன், மனைவி மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுந்தர் கணேஷ் தன் மனைவி நித்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு காரில் ஏறி தப்பிச் சென்றார்.
மேலும் பரிசுத்தம் நகருக்கு சென்று அங்கு பால் பூத் நடத்தி வரும் திருவையாறு அருகே கீழத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (35) மற்றும் கோபி (32) ஆகிய இருவரையும் சுந்தர் கணேஷ் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் மீண்டும் தன் காரில் ஏறி திருச்சி சாலையில் தப்பி சென்று விட்டார். தாமரைச்செல்வன் மற்றும் கோபி இருவரையும் சுந்தர் கணேஷ் அரிவாளால் வெட்டியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதற்கிடையில் அரிவாள் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்த நித்யாவில் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பால் பூத்தில் நடந்த சம்பவமும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார், தஞ்சை தெற்கு போலீசார் விரைந்து வந்து பலத்த காயமடைந்த நித்யாவை தனியார் மருத்துவமனைக்கும், தாமரைச்செல்வன், கோபி ஆகியோரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே காரில் தப்பிச்சென்ற சுந்தர்கணேஷ் நகர் பகுதியில் தாறுமாறாக காரை இயக்கி சென்றுள்ளார். தொடர்ந்து தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி வரை சென்றுவிட்டு மீண்டும் தஞ்சை நோக்கி தவறான திசையில் காரை மிக வேகமாக இயக்கி வந்துள்ளார். அப்போது செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிப்பட்டி பகுதியில் எதிரில் வந்த லாரி மீது நேருக்கு நேர் கார் மோதியதில் படுகாயமடைந்த சுந்தர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அடுத்தடுத்த சில மணி நேரத்தில் சினிமாவில் வருவது போன்று நடந்த இந்த 3 சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார், தஞ்சாவூர் தெற்கு மற்றும் செங்கிப்பட்டி போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.