தஞ்சாவூர்: நடப்பாண்டு குறுவை, சம்பா பருவத்தில் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தஞ்சையில் நடந்த சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சி கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அதிகாலையில் அரைப்படி நெல் கூலி உயர்வுக்காக போராடிய 44 விவசாய தொழிலாளர்கள், குழந்தையுடன் குடிசைக்குள் தீ வைத்து கொளுத்தப்பட்டனர். இதற்கு பதிலாக கடந்த 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வெண்மணியில் 44 பேர் படுகொலைக்கு காரணமாக இருந்த நபர் பழி தீர்க்கப்பட்டார். இந்த டிசம்பர் 14ம் தேதியை சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சி சார்பில் ஆண்டுதோறும் வெண்மணி வெற்றி நாள் விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்ற வெண்மணி வெற்றி நாள் விழா கூட்டத்திற்கு சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் அருணாச்சலம் தலைமை வகித்தார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமர், புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலு, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வீரக்குமார், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், ஜனநாயக தொழிற்சங்க மைய பொதுச்செயலாளர் ராஜேந்திரன், கெதர் கம்யூனிஸ்ட் கட்சி  பாஸ்கர் மற்றும் பலர் சிறப்புரையாற்றினர்.


நிகழ்ச்சியில் வெண்மணி  போராளிகள் வெண்மணி குமரன், சதாசிவம், செல்வராஜ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டது. வெண்மணி சம்பவத்தை முழுமையாக கீழைத்தீ பின் வெண்மணி என்னும் நாவல் எழுதிய கவிஞர் பாட்டாளி, அரை நூற்றாண்டு கொடுங்கோல் கனவு என்ற நூலை எழுதிய எழுத்தாளர்                    சண்முகசுந்தரம் ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தேவா, அருண்குமார், ராஜா, சங்கர், கோபி, ஜோதிவேல், பாஸ்கர் உள்ளிட்டர் பங்கேற்றனர். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.


கூட்டத்தை ஒட்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவமழை தவறியதாலும், காவிரியில் போதிய தண்ணீர் வரத்தின்றியும் குறுவை,சம்பா விவசாயம் நடப்பாண்டில் பாதித்துள்ளன. விவசாயத்தை நம்பி குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற லட்சத்துக்கு மேற்பட்ட விவசாய  தொழிலாளர்கள் குறுவை,சம்பா பருவங்களில் வேலை இழந்து மிகவும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். கடன் தொல்லையால் துன்பப்படுகின்றனர். 


குறுவை, சம்பா சாகுபடி வேலை இழப்பீடாக விவசாய தொழிலாளர்  குடும்பத்திற்கு தலா ரூ.30 சூக்ஷ இழப்பீடாக வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை அரசு ஊழியர், ஆசிரியர்கள் வேலை செய்கின்ற நாட்கள் அடிப்படையில் ஆண்டு முழுவதும் கணக்கிட்டு வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி சம்பளமாக ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் கணக்கிட்டு குறைந்தபட்சம்  தினசரி சம்பளம்  ரூ. 800 வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை கிராமப்புறம் மட்டுமல்லாது பேரூராட்சி,நகராட்சி மாநகராட்சி பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கும்,


வளர்ச்சி திட்டங்களுக்கும், நீராதார மேம்பாடுகளுக்கும்  ஆக்கபூர்வ திட்டங்களை வகுக்க வேண்டும்,    அந்த அடிப்படையில் வேலைகள் வழங்கப்பட வேண்டும், நுண் கடன் நிறுவனங்கள் மூலம் (மைக்ரோ பைனான்ஸ்) கடன் பெற்றுள்ளவர்கள் தற்போது விவசாய வேலைகள் இன்றியும், 100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக வேலை கிடைக்காமலும் மிகவும் துன்பகரமான சூழ்நிலைமையில் உள்ளனர்.இதனால் கடனை கட்ட இயலாத நிலையில் உள்ளனர். நுண் கடன் நிறுவனங்கள்   கடன் பெற்றவர்களை மரியாதை இன்றி கெடுபிடியாக வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும், தற்போது உள்ள சூழ்நிலையில் அவர்கள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.