தஞ்சாவூர்:  மூன்று குற்றவியல் சட்டங்களையும், தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பரப்புரை இயக்கம் நடந்தது. அந்த வகையில் தஞ்சாவூரில் இந்த பரப்புரை இயக்கம் மூன்று இடங்களில் நடைபெற்றது.    


இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.


புதிய சட்டத்தின்படி கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். வழக்கின் முதல் விசாரணையில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டினை பதிவு செய்ய வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் சாட்சியங்களைப் பாதுகாக்க உரிய ‘சாட்சி பாதுகாப்புத் திட்டங்களை’ செயல்படுத்த வேண்டும்.


பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை பெண் காவல் அதிகாரி பதிவு செய்வார். அப்போது பாதிக்கப்பட்ட நபரின் பாதுகாவலர் அல்லது உறவினர் உடன் இருக்கலாம். உரிய மருத்துவ அறிக்கைகள் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


இந்தப் புதிய சட்டத்தின்படி சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றத்துக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை வாங்குதல், விற்பனை செய்தல் கடுங்குற்றமாகக் கருதப்படுகிறது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளது .இந்த சட்டங்கள் மக்களுக்கு எதிரான சட்டமாகும். ஏற்கனவே ஆங்கிலத்திலும், அந்தந்த தாய் மொழியிலும் இருந்து வந்த குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருத மொழியில், காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கின்ற வகையில் சட்டங்களை இயற்றி உள்ளது.


இதேபோல போராடி பெற்ற 44 தொழிலாளர் சட்டங்கள் நான்கு தொகுப்பாக கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுக்கு எதிரான மூன்று குற்றவியல் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளையும் மத்திய மோடி அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய பரப்புரை இயக்கம் தஞ்சையில் நடைபெற்றது.


தஞ்சாவூர் கரந்தை, நிக்கல்சன் வங்கி,  கீழவாசல் காமராஜர் சிலை ஆகிய மூன்று இடங்களில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், சி.ஐ.டி.யூ., மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ மாவட்ட செயலாளர் கே. ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். இயக்கத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் பாஸ்டின், கே.டி‌காளிமுத்து, சேவையா, துரை.மதிவாணன், கோடீஸ்வரன், முத்துக்குமரன்,பி.செல்வராஜ், மூர்த்தி, மணிமாறன், ரவிச்சந்திரன், முத்துக் கிருஷ்ணன், மணிவாசகம், ஜெயபால், நடராஜன், அழகு தியாகராஜன், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.