தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயில் அருகே சிவகங்கை பூங்காவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த யானைக்கால் மரத்தின் பெரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் பெரியகோயிலுக்கு பிரதோஷத்துக்காக வந்த 3 பெண் பக்தர்கள் காயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன.

தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறும். அதன்படி நேற்று மாலை நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பெரியகோயிலுக்கு வழக்கமான நாட்களில் வரும் பக்தர்களின் கூட்டத்தை விட பிரதோஷ நாட்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதற்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்கள் பெரியகோயில் முன்பு உள்ள வாகன நிறுத்தும் இடம் மற்றும் சிவகங்கை பூங்கா வழியாக வரும் வழியிலும் ஏராளமான வாகனங்களை வரிசையாக நிறுத்தி இருந்தனர். பிரதோஷ வழிபாடு முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டபடி இருந்தனர்.

இந்நிலையில் பெரியகோயில் அருகே உள்ள சிவகங்கை பூங்காவில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த யானைக்கால் மரத்தின் பெரிய மரக்கிளை திடீரென முறிந்து பெரியகோயிலுக்கு செல்லும் பாதையில் விழுந்தது. அந்த மரக்கிளை மின்கம்பியிலும் விழுந்ததால் 2 மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. இந்த மரத்தின் அடிபாகம் யானையின் கால் போன்ற அமைப்புடன் காணப்படும். இதனால் இதற்கு இந்த பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. மிகவும் பழமையான இந்த மரத்தின் ஒரு பெரிய கிளைதான் முறிந்து விழுந்தது.

இந்த மின்கம்பங்கள் பெரியகோவிலுக்கு செல்லும் வழியின் ஓரத்தில் நிறுத்தி இருந்த வாகனங்கள் மீது விழுந்தன. இதில் 3 வாகனங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. 7-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிறிய அளவில் சேதம் அடைந்தன.

மேலும் மின்கம்பம் விழுந்த போது கரந்தையை சேர்ந்த பெண் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதில் அவருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. மேலும் உமாதேவி என்ற பெண்ணுக்கு தலையிலும், சுருதி என்ற பெண்ணுக்கு தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உத்தரவின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்து மின்சாரத்தை துண்டித்தனர். இதையடுத்து மரக்கிளைகளை இயந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டது.

மேலும் மின்கம்பங்களில் இருந்த கம்பிகளையும் அகற்றும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். மின்கம்பி மற்றும் கம்பங்களுக்கு இடையில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் சிக்கிக்கொண்டன. கோயிலில் தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்த பக்தர்கள் தங்கள் வாகனங்கள் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனையும் மிகுந்த சிரமத்திற்கு இடையே வெளியே எடுத்து வந்தனர்.

தஞ்சை மேற்கு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் தஞ்சை சிவகங்கை பூங்காவிற்கு செல்லும் கோட்டை வாயிலில் போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.