தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திக் கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது


தஞ்சாவூர் மேல அலங்கம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மகன் தர்ஷன் (32). இவரது வீட்டு வாசலில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி குணசேகரன் (42) தனது பைக்கை தொடர்ந்து நிறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.


இந்நிலையில் கடந்த மார்ச் 9ம் தேதி இரவு இதுகுறித்து ஏற்பட்ட தகராறில் தர்ஷனை, குணசேகரன் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த தர்ஷன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு மார்ச் 10ம் தேதி அதிகாலை இறந்தார்.


இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து குணசேகரனைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி கே. பூரண ஜெய ஆனந்த் விசாரித்து குணசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.