தஞ்சாவூர்: தீபாவளி என்றாலே புத்தாடை, வெடிகள் நினைவுக்கு வந்தாலும் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது இனிப்பு மற்றும் கார வகைகள் தான். அதிலும் முறுக்குக்கு தனி இடம் உண்டு. ஆனால் இந்த ஆண்டு ரெடிமேட் முறுக்கு மாவுகளை மக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். இதனால் மாவு அரவை மில்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் பலகாரத்திற்கு மாவு அரைக்க யாரும் வராததால் அரவை ஆலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தீபாவளி பண்டிகை திருநாளில் வீடுகளில் விதவிதமான பலகாரம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி மகிழ்வது வழக்கம். மணக்கும் முறுக்கும், சரசரக்கும் புத்தாடைகளும், பட் படார் என்று வெடித்து சிதறும் வெடிகளையும் நினைத்து தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பலகாரம் செய்வதற்கான ஆயத்த பணிகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
தீபாவளிக்கு செய்யப்படும் முறுக்கு, அதிரசம், தட்டை, ரவா லட்டு, இனிப்பு மடக்கு, சீடை, மாவு பாகு உருண்டை போன்ற பலகாரங்கள் பிரசித்தி பெற்றவை ஆகும். பண்டிகைகளையும் கொண்டாட்டங்களையும் அர்த்தம் உள்ளதாக உருவாக்கி தந்த நமது முன்னோர்கள் அடை மழை காலத்தில் வரும் தீபாவளி பண்டிகையின்போது சில நாட்கள் கெடாமல் இருக்கும் உணவு பொருட்களை முன்கூட்டியே தயாரித்து வைப்பதற்கான முன் ஏற்பாடே தீபாவளி பலகாரங்கள் எனலாம்.
தீபாவளி பண்டிகை வர இருந்தால் 2 வாரத்திற்கு முன்பே பலகாரம் செய்வதற்காக ஆலைகளில் மாவு அரைக்க பொதுமக்கள் கூடுவார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 7 நாட்களே உள்ளது. ஆனால் கும்பகோணத்தில் பெரும்பாலான அரவை ஆலைகளில் பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் அரவை ஆலை உரிமையாளர்கள் மாவு அரைக்க வரும் பொதுமக்களுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து அரவை ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், “பழைய காலங்களை போல் பலகார மாவு அரைக்க உரல், திருகை போன்றவற்றை யாரும் தற்போது பயன்படுத்துவதில்லை.
அனைத்தும் இயந்திர மயமாகி விட்டதால் மில்களை நோக்கியே வந்தார்கள். ஆண்டு தோறும் தீபாவளிக்கு 2 வாரத்திற்கு முன்பே அரவை ஆலைக்கு வந்து விடுவார்கள். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இரவு முழுவதும் காத்திருந்து அரைத்து சென்றுள்ளனர். ஆனால் தற்போதை காலகட்டத்தில் இனிப்புகளை கடைகளில் வாங்கி சென்று விடுகின்றனர். இன்னும் சிலர் ரெடிமேட் மாவு வாங்கி தயார் செய்கின்றனர். மாவு அரைக்க முறுக்கு, அதிரசம், ரவா லட்டு என பதார்த்தங்களுக்கு ஏற்றவாறு தனித்தனி மிஷின்களில் மாவு அரைத்து வந்தோம். தற்போழுது பொதுமக்கள் தனித்தனி பாக்கெட்டுகளில் கடையில் வாங்கி செல்கின்றர். ஒரு சிலர் மட்டுமே பாரம்பரியத்தை மறக்காமல் வந்து அரைத்து செல்கின்றனர்” என்றனர்.
பரபரப்பான இன்றைய காலகட்டத்தில் முறுக்கு முதல் சப்பாத்தி வரை அனைத்தும் ரெடிமேடாக கிடைப்பதால் பொதுமக்கள் முன்பு போல் பச்சரிசி மாவு உளுந்து போன்றவற்றை அரைத்து முறுக்கு சுடுவதற்கு நேரத்தை வீணாக்குவதில்லை. ரெடிமேடாக விற்கப்படும் முறுக்கு மாவுகளை சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கி வந்து தீபாவளிக்கு முதல் நாள் இரவில் செய்கின்றனர். இதனால் அரவை மில்கள் அனைத்தும் காற்று வாங்குகின்றன.