தஞ்சாவூர்: குமிழித்தூம்பு என்றால் என்னன்னு தெரியுங்களா? தொலைநோக்கு சிந்தனையும், நீர் மேலாண்மையில் தலைசிறந்தும் விளங்கியவர்கள் சோழ மன்னர்கள். சோழர் காலத்தில் நீரை சேமித்து வைக்க செய்த பல ஏற்பாடுகள் பற்றி தெரிந்து இருப்போம். அதிலும் அறிவியல் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு விஷயம்தான் குமிழித்தூம்பு என்பது. அப்போதே அறிவியலில் அருமையான புலமை பெற்று இருந்தனர் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சிதான்
குமிழித்தூம்பு என்பது ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதை தெரிந்து கொள்வோம். இப்போது இயந்திரங்களின் பயன்பாடு என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் அக்காலத்தில் எவ்வித நவீன வசதிகளும் இல்லாதபோதே தெள்ளத் தெளிவாக நீர் மேலாண்மையை மேற்கொண்டவர்கள்தான் சோழ மன்னர்கள். அவர்களில் ராஜராஜ சோழனின் நீர் மேலாண்மை அறிவு மிகவும் அறிவியல் சார்ந்ததாக அமைந்துள்ளது. இக்காலத்தில் ஏரியை தூர்வார பொக்லைன் போன்ற பெரிய இயந்திரங்கள்தான் தேவைப்படுகிறது. ஆனால் அக்காலத்திலேயே சோழர்களின் அறிவியல் அறிவு குமிழித்தூம்பை பயன்படுத்தி நீரை வெளியேற்றவும், ஏரிகளில் உள்ள சேறை வெளியேற்றவும் செய்துள்ளது பிரமிக்க வைக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு குமிழித் தூம்பின் பெயரே `ராஜராஜன்' எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் ஏரி நீர்ப்பாசனத்துக்காக அறிவியல் தொழில் நுட்பத்துடன் பயன்படுத்திய மதகுக் கட்டுமானத்தைக் குமிழித் தூம்பு எனக் குறிப்பிடுவர். மாவட்டம்தோறும் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் கரையிலிருந்து ஏரியின் உட்புறம் சிறிது தூரத்தில் இரண்டு கல்தூண்கள் குறுக்கு விட்டங்களுடன் நிற்பதைக் காணலாம். அந்த இடத்திலிருந்து பூமிக்குக் கீழாக அமைக்கப் பெற்றுள்ள சுரங்கக் குழாய் வழியாக வெளியேற்றப்படும் நீர் ஏரிக்கரைக்கு வெளியே வந்து கால்வாய் வழியாகப் பாயும்.
இத்தகைய குமிழித்தூம்பு அமைப்பால் பாசனம் பெறும் ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு எவ்வளவு நீர்த்தேவையோ அந்த அளவு நீரை மட்டுமே வெளியேற்றலாம். அதேநேரத்தில் ஏரியின் தரையில் படியும் சகதியின் பெரும்பகுதி நீரோடு வெளியேறும் வகையில் சிறப்பான தொழில்நுட்ப அமைப்பு இருப்பதால் அவையும் ஏரியின் தரையில் படியாது.
சரி குமிழித்தூம்பு எப்படி இருக்கும்? ஏரியிலிருந்து இது தேவையான அளவு மட்டும் தண்ணீரை வெளியேற்ற உதவ, ஒரு கற்பெட்டி போன்று அமைத்திருக்கும். இந்த கல்பெட்டி மேலே அரையடி விட்டத்தில் துளை இருக்கும். இந்த துளைக்குப் பெயர் நீரோடி ஆகும். இந்தத் துளையை குழவி போன்ற ஒரு கல் கொண்டு மூடி இருப்பார்கள். பெட்டியின் தரை மட்டத்திலும் சிறிய அளவிலான இரண்டு மூன்று துளைகள் இருக்கும் இவற்றை சேறோடி என்பர்.
ஏரியின் தரைமட்டத்திற்கு கீழே இந்த கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும் வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது துளையில் உள்ள குழவிக்கல்லை தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று எடுத்து விடுவர், அப்போது ஏரியின் நீரோடி துளை வழியாக 80 விழுக்காடு நீரும், சேறோடி வழியாக 20 விழுக்காடு சேறு கலந்த நீரும் வெளியேறும்.
இதனால் ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும். சில ஏரிகளில் இந்தத் தூம்பு மதகு உள்ள இடத்தை அடையாளம் காட்டும்விதமாகக் கல் மண்டபங்கள் அமைத்திருப்பர். நம் முன்னோர்களின் தெளிவான சிந்தனையும், நீர் மேலாண்மையும் இக்கால தலைமுறையினர் நன்கு அறிந்தும், தெரிந்தும் கொள்ள வேண்டும்.