தஞ்சாவூர்: கார்த்திகை பட்டத்தில் விதைப்பு மேற்கொள்ள கதிரி 1812, GJG 32 ஆகிய நிலக்கடலை ரக விதைகள் திருவோணம், பூதலூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவசத்திரம் ஆகிய வட்டாரங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த குறுவை பருவத்தில் 78,486 எக்டர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை முழுமையாக நிறைவடைந்துள்ளது.  

இந்தாண்டு குறுவைப் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 1,38,561 மெ.டன் நெல் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதிய நீர் வரத்து இல்லாத காரணத்தால் 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்த 55.71 எக்டர் குறுவை பரப்பிற்கு நிவாரணம் வழங்கிடும் பொருட்டு அறிக்கை பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சம்பா/தாளடி பருவத்தில் தற்போது வரை 1,03,860 எக்டர் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 1.482 மெ.டன்கள் நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆடுதுறை-54, கோ-50 போன்ற மத்திய கால ரக விதைகளும் டி.பி.எஸ்-5. கோ-51 ஆகிய குறுகிய கால நெல் விதைகளும் 161 மெ.டன்கள் அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கார்த்திகை பட்டத்தில் விதைப்பு மேற்கொள்ள கதிரி 1812, GJG 32 ஆகிய நிலக்கடலை ரக விதைகள் திருவோணம், பூதலூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவசத்திரம் ஆகிய வட்டாரங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 20 மெ. டன் நிலக்கடலை விதைகள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்ள ஆணை பெறப்பட்டுள்ளது.


நடப்பு பருவத்திற்கு 8,265 மெ.டன் யூரியா, 1,651 மெ.டன் டி.ஏ.பி. 1.641 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 2,808 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுவருகின்றது.

நடப்பு சம்பா/தாளடி பருவத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ள 22.11.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு 2,38,170 ஏக்கர் பரப்பில் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பயிர் காப்பீடு செய்தவர்களில் நடவு செய்ய உள்ளோர். விதைப்பு  செய்ய உள்ளோர் போன்று அடங்கல் சான்றுகள் பெற்று பதிந்தவர்கள் நடவு/விதைப்பு செய்தபின் திருந்திய அடங்கல் பெற்று பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்துப் போதல் போன்ற காரணங்களினால் 75% சாகுபடி பரப்பு குறைந்துள்ள கிராமங்கள் தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு ஆகிய வட்டாரங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றிக்கு உரிய பிரேரணைகள் மாவட்ட அளவிளான கண்காணிப்புக் குழு மூலம் அரசுக்கு சமர்பிக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கிசான் கடன் அட்டை விண்ணப்பங்கள் பெறுவதற்கு "இல்லம் தேடி கிசான் கடன் அட்டை" முனைப்பு இயக்கம் கடந்த 01.10.2023 முதல் கிராமங்கள்தோறும் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் சேகரம் செய்யப்பட்டு வருகின்றன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 118 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. பாரம்பரிய வேளாண் வளர்ச்சி (பரம்பராகட் கிரிஷி விகாஸ் யோஜனா) திட்டத்தில் அங்கக வேளாண்மை முறையில் 400 எக்டரில் தொகுப்பு முறையில் சாகுபடி செய்வதற்கு அனைத்து வட்டார விவசாயிகளுக்கும் வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.