தஞ்சாவூர்: பிடிச்சாச்சு... இடம் பிடிச்சாச்சு... கடை போட இப்போவே இடம் பிடிச்சாச்சு என்பது போல் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாலையோரத்தில் கட்டில்களை கொண்டு வெளியூர் வியாபாரிகள் இடம் பிடித்துள்ளனர்.


தீபாவளி பண்டிகை வந்தாச்சு... வியாபாரிகளும் இடம் பிடிச்சாச்சு


இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்று. புத்தாடை, பட்டாசுகள் தான் தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும். தீபாவளி பண்டிகைக்கு 1 மாதத்திற்கு முன்பே புத்தாடைகள் வாங்குவதற்காக கடைத்தெருக்களுக்கு மக்கள் செல்வார்கள். தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வெளி மாவட்ட தரைக்கடை வியாபாரிகள் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பல இடங்களில் வியாபாரத்திற்காக இடத்தை பிடித்துள்ளனர். இதற்காக தங்களுக்கு உரிய இடத்தில் கட்டில்களை கட்டி வைத்துள்ளனர்.


கும்பகோணத்திற்கு அரியலுார், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, கடலூர், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் பல்வேறு பொருட்கள் வாங்க பொதுமக்கள் வந்து செல்வர். இருப்பினும் தீபாவளிக்கு முன்னதாக குடும்பத்துடன் வந்து பித்தளை பொருட்கள், துணிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்து வந்து விடுவார்கள். அவர்கள் காலை நேரத்தில் வந்து விட்டு மாலை வரை பொருட்களை வாங்கிக் கொண்டு பிறகு குடும்பத்துடன் வீட்டிற்கு செல்வார்கள். இதனால் தீபாவளி காலங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை விட கும்பகோணத்தில் கூடுதலாக வர்த்தகம் நடக்கும்.


கும்பகோணத்தில் குவியும் வெளிமாவட்ட சில்லறை வியாபாரிகள்


இந்நிலையில் ஒவ்வொரு தீபாவளிக்கும் வெளி மாவட்ட சில்லறை வியாபாரிகள் தோடு, ஜிமிக்கி, குறைந்த விலையில் சேலைகள், வேட்டி, சட்டைகள், பெல்ட், பட்டாசுகள், பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்வதற்காக கும்பகோணத்திற்கு வருவார்கள். அவா்கள் தஞ்சை சாலையில் பொற்றாமரை குளம், மகாமக குளம், ஆயிகுளம் ரோடு, காந்தி பூங்கா, மடத்துத்தெரு, நாகேஸ்வரர் வடக்கு வீதி, கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதி, சோமேஸ்வரர் கோவில் தெற்கு வீதி, உச்சிபிள்ளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைப்பார்கள்.


கட்டிலை அடையாளமாக வைத்துள்ள வியாபாரிகள்


அதற்காக அந்த பகுதிகளில் ஒருமாதத்திற்கு முன்பிலிருந்தே அவர்கள் கடை போடும் இடத்திற்கு அடையாளமாக கட்டில்கள், சேலைகள், பெட்டிகள், கயிறுகளை கட்டி அடையாளமாக வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதன் பின்னர் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு வந்து தாங்கள் கடை வைப்பதற்கான அடையாள உள்ள இடங்களில் கடை வைத்து வியாபாரம் செய்வார்கள். இவர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக, பலத்த மழை பெய்தாலும், வெயில் அடித்தாலோ, கவலைப்படாமல், கும்பகோணம் பகுதியில் வியாபாரத்திற்காக வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இதே போல் இவர்களது உறவினர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் தீபாவளி வியாபாரத்திற்கு சென்றாலும், கும்பகோணத்தில் தான் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்று வியாபாரிகள் கூறுவார்கள். கடைகள் அமைக்க கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலும் தீபாவளி விற்பனை அதிகம் நடக்கும் என்பதால் வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகம் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 


சரியான கட்டணம் வசூலிக்கணும்


தீபாவளியை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள நகை, ஜவுளி, பாத்திரக்கடைகளில் போட்டிபோட்டு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்வார்கள். இவர்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் கடைகள் அமைக்க கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் கடந்த  ஆண்டு நிலையான தொகை இல்லாமல் மாற்றங்களுடன் அதிளவில் வசூலிக்கப்பட்டது. அதே போன்று இந்த ஆண்டு நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிலையான வாடகை நிர்ணயம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.