தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே பாம்பு கடித்து சிறுநீரகம் பாதித்த சிறுமிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவக்குழுவினருக்கு மருத்துவக்கல்லூரி டீன் பாராட்டுக்கள் தெரிவித்தார்.


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி ஷீலா. இவர்களின் மகள் சத்திகா (10). 5ம் வகுப்பு மாணவி. கடந்த 4ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியின் இடது கையில், கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது. இதனால் அலறி துடித்த சிறுமியை அவரது பெற்றோர் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமி தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமிக்கு பாம்பு கடித்ததால் ரத்தம் உறைதல் குறைபாடு மற்றும் தற்காலிக சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதை கண்டறிந்து பாம்புகடி விஷமுறிவு சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். மருத்துவக்குழுவினர் தொடர் கண்காணிப்பில் இருந்த சிறுமி உடல் நலம் தேறினார். இதையடுத்து 27 நாட்களுக்கு பிறகு நேற்று சிறுமி சத்திகா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


மருத்துவக்கல்லுாரி டீன் பாலாஜிநாதன், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் ஆகியோர் சிறுமிக்கு பழங்கள் வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளித்த சிறுநீரகத்துறை தலைவர் ராஜ்குமார், டாக்டர் கண்ணன் குழுவினருக்கு டீன் பாலாஜிநாதன் பாராட்டுக்கள் தெரிவித்தார். 


தங்கள் மகளின் உயிரை காப்பாற்ற விரைவாக சிகிச்சை அளித்த மருத்துவக்கல்லூரி நிர்வாகம் மற்றும் டீன், மருத்துவக்குழுவினருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நன்றியும், பாராட்டுக்களும் தெரிவித்தனர். விரைவாக செயல்பட்டு சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவக்குழுவினருக்கு பொதுமக்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர். 




பின்னர் மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது; இந்தாண்டு கடந்த 10 மாதங்களில் 981 பாம்புகடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 903 பேர் குணடைந்துள்ளனர். பாம்பு கடித்தால், விஷ முறிவை தடுப்பதற்காக கிராமங்களில் முதலுதவி என்ற பெயரில் கட்டு போடுதல், ரத்தத்தை உறிஞ்சுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. அரை மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் விஷக்கடிக்கான தடுப்பூசியை செலுத்தினால் உயிருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க முடியும்.  


இதை போல உறுப்பு தானம் குறித்து மக்கள் மத்தியில் குறைந்த அளவில் தான் விழிப்புணர்வு உள்ளது. மூளைசாவு அடைந்தவர்களின் உறுப்புகள் மட்டுமே பயன்படுத்த முடியும். நமது மருத்துக்கல்லுாரியில் 9 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் வழங்கிய 5 பேரிடம் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டயாலிசிஸ் பெற 31 ரத்த சுத்தகரிப்பு கருவிகள் மூலம் 2,000 பேர் பயன் அடைந்துள்ளனர். டயாலிசிஸ் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைக்காக 63 பேர் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.