தஞ்சாவூர்: தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடந்த சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியானது தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரியில் தொடங்கி ஆர்.ஆர் நகர் வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் உள்ளே சென்று மன்னர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரி வரை நடைபெற்றது. இப்பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன


இப்பேரணியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட குற்ற பதிவேடு கூடம் துணை காவல் கண்காணிப்பாளர் திவ்யா, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ரோஸி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார், உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன், தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.




இதேபோல் தஞ்சை அருகே வல்லத்தில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை வல்லம் டிஎஸ்பி., நித்யா தொடக்கி வைத்தார். வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வல்லம் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


போதை ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்கள்


தொடர்ந்து வல்லம் பஸ்ஸ்டாண்டில் இருந்து மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இதில் குடிபோதையில் குடும்ப சந்தோசத்தை இழக்கக்கூடாது, போதையை ஒழிப்போம்! புதிய பாதையில் செல்வோம். உயிரை அழிக்கும் உடலை உருக்கும் கொடிய எதிரி போதைதான். போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள். போதை அது சாவின் பாதை. தலைக்கவசம்! உயிர் கவசம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சீட் பெல்ட் அணிந்தால் பாதுகாப்பு. இதுவே பயணத்தின் உயிர்காப்பு, சாலை விதிகளை பின்பற்றுவோம் என்பன போன்ற விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. முக்கிய வீதிகள் வழியாக இந்த பேரணி சென்றது.


பின்னர் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியையும் மாணவ, மாணவிகள் ஏற்றனர்.